பால் மணம்

பால் மணம் இன்னும்
எஞ்சி இருக்க…
பருவ மங்கை என்று
எச்சம் வைக்க…
அலையும் சில ஆண்குல
அவமானச் சின்னங்கள்…

குழந்தை என்றும் கருணையற்று
படுக்கைக்கு இட்டுச் செல்ல…
பட்டாம்பூச்சி வயதில்
பட்டுத் திரியாய் சிதைந்து…
கயவர்களின் காமப்பசியில்
களைத்து புண்ணாகி மயக்கம் கொண்டாள்…

கண்டெடுத்து தவிக்கும் உறவுகள்…
கண்ணில் கண்ணீருடன் பெற்றோரும்
நெஞ்சில் நெருப்புடன் அண்ணனும்…
பிஞ்சும் இமை திறந்தது
அஞ்சியது அவள் பார்வை…
அண்ணனின் தொடுகையிலும்
அப்பாவின் முத்தத்திலும்
அன்னையை இறுக்க கட்டிக்கொண்டு…

அப்பா என்று ஓடி வந்து
அணைக்கும் செல்லக் குட்டி
நித்திரை கொள்வதற்கு முன்…
அயர்ந்து உழைத்த களைப்பு
முகத்தில் தெரியாமல் மறைத்து
முத்தம் வைக்க ஓடி வரும் தகப்பன்…

சிறந்த பாசத்தை கொட்டி
சுற்றி சுமக்கும் தமையன்…
யானை அம்பாரி தூக்கி
சின்ன தங்கையுடனும்
செல்லமாக விளையாட்டில் தோற்று
உவகையுடன் உலா வரும் அவன்…

விழி திறந்து மகள் பார்த்த
வேற்றுப் பார்வையில்
உயிரோடு புதைந்து போனார் தந்தை…
மிரட்சியுடன் தன்னை பார்த்த
தங்கையின் செயலில்
கொலைவெறி கொண்டான் தமையன்…

காமுகர்கள் சிதைத்தது
அவள் உடலை மட்டுமல்ல…
இனி அவளை அரவணைக்கும்
தந்தையின் அன்பு முத்தமும்
இதமான அண்ணனின் அருகாமையும்
அந்நியமாகி போவது கொடுமையே!!

**** ஆர்த்தி ரவி

Advertisements

2 thoughts on “பால் மணம்

Comments are closed.