காதல் தீவிரவாதி!

காதல் தீவிரவாதி

உன் இரு
விழிகள் என்ன
வாள்களோ?
கூரிய பார்வையால்
இதயம் நுழைந்து
பதம் பார்க்கிறாய்..
இதமாகவே தேங்கி நிற்கிறாய்..

ஏன், போரிட்ட களைப்போ?
உன் விழிகள்
இளைப்பாற வேறு
இடமா இல்லை?
என் இரு
உதடுகளை குத்தகைக்கு
எடுத்துக் கொள்கிறாய்..

முத்தம் கொடுக்காமல்
வேர்வை
முத்துக்களை கோர்க்க செய்யும்
வித்தை உன்னால் மட்டும்
எப்படி சாத்தியம் ஆகிறது..

மாலை நேரத்தென்றலில்
பிழைத்து நிற்கும்
மயிர் கால்கள் உன்
பார்வையின் வேட்கையில்
சிலிர்த்து போகின்றன..

கை படாமலே
படபடத்து போகிறேன்..
மெய் தீண்டாமலே
காதல் தீவிரவாதம்
செய்கிறாயடா..

உன் காதல் தீவிரவாதம்
வரவர எல்லை மீறுகிறதே!
மொழியின்றி போரிடுகிறாய்..
விழியோடு மோதுகிறாய்..
மூச்சுக்காற்றை கொண்டு
மன உறுதியை
ஊஞ்சலாட வைக்கிறாய்..

நெஞ்சை பூப்போல
கொய்து
காதலில் எனை
வென்று விட்டாயடா..
காதல் தீவிரவாதியே!

~~~~~ ஆர்த்தி ரவி

Advertisements