இன்றைய காதல்!

யார் சொன்னது இக்காலத்தில்
காதல் செய்வது எளிது,
காதலர்களுக்கு வசதிகள் அதிகம் என?

கேட்பானில் வழியும்
உன் பட்டுக் குரலில்
சிறைப்பட்டுத் தவித்துப் போகிறேன்..

தொடுதிரையில் பளபளக்கும்
உன் உதடுகளைத்
தீண்டிட வழியில்லை..

இதழ்களைக் குவித்து
நீ வைக்கும் முத்தங்களின்
தித்திப்பை உணர முடியவில்லை..

நிமிடத்திற்கு ஒரு முறை
உன் தளிர் விரல்களின்
மென் ஸ்பரிசத்தால்
உயிர் பெறுவது நானில்லை..

எனக்கான
பல்லாயிரம் முத்தங்களைப்
பெற்றுக்கொண்டும்,
உறக்கத்திலும் உன் நெஞ்சோடு
உரசிக்கொண்டும்,
அருகில் கிடப்பது
ஆப்பிள் ஐபோன்..

உன்னை நினைத்து
ஏக்கத்தில் கரைந்து
கொண்டிருப்பனுக்கு
மேலும் தீ மூட்டுவதாய்..

பொறாமையில் நீள்கின்றன
உறக்கமில்லா என் இரவுப்பொழுதுகள்…

~~~~~ ஆர்த்தி ரவி

Advertisements