விலகிடுவேனா இதயமே 02

தேனி பேருந்து நிலையம் அந்தப் பின் மாலைப் பொழுதில் மிகப் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

 

சிலுசிலுவென வீசிக் கொண்டிருந்த காற்றில் கலைந்திருந்த கேசத்தைத் திருத்திய அர்ஜூன் தன் பல்சரை விட்டு இறங்கினான். மதுரை சென்று திரும்பும் அம்மாவை அழைத்துப் போக வந்திருந்தான்.

 

சில நிமிடங்கள் கரைந்தன. அவனின் அம்மா சுமித்ரா வரும் பேருந்து இன்னும் வந்திருக்கவில்லை.

 

பைக்கில் சாய்ந்து கைகளை நெஞ்சின் குறுக்கே கட்டி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜூன். நிறைமாத கர்ப்பிணியைப் போல் நிறைந்து நகர முடியாமல் திணறி முன்னேறிய பேருந்துகளில் இன்னும் முட்டி மோதி ஏறத் துடிக்கும் சனங்களைக் கண்டு அவனுக்கு உதட்டோரம் புன்னகை மலர்ந்தது.

 

அன்று ஞாயிறு வேறு. கூட்டத்தைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? தேனியில் கூடும் ஞாயிற்றுக்கிழமை சந்தை அந்த வட்டாரத்தில் பெயர் போனதல்லவா? பெரிய உழவர் பொதுச்சந்தை கூடுவது அன்று ஒரு நாள் தான். சில்லரை வியாபாரிகளுக்குத் தகுந்தது.

 

மொத்த வியாபாரிகளுக்கு வியாழனும் ஞாயிறும் சந்தை நாட்கள். சுற்று வட்டாரத்திலுள்ள கிராமங்களிலிருந்து வரும் உழவர்களும் பெரும் வியாபாரிகளும் கமிசன் மண்டிகளை நிரப்பி நிரம்பி முழி பிதுங்க வைப்பார்கள்.

 

புதனன்று கமிசன் மண்டிகளுக்கும் பெரும்பாலான கடைகளுக்கும் விடுமுறை நாள். கணவன்மார்கள், ஆண்பிள்ளைகள் வீட்டில் ஓய்வாக இருப்பது அன்று ஒரு நாள் மட்டுமே. அதனால் தான் தேனியில் சனி, ஞாயிறு மட்டுமல்லாமல் புதன்கிழமைகளிலும் நிறைய வீடுகளில் அசைவ உணவு வகைகளின் வாசனை காற்றில் கலந்து மணப்பது.

 

லேசாகத் தூத்தல் போட ஆரம்பித்தது. அர்ஜூன் தன் முகத்தில் தெறித்த சில மழைத்துளிகளைச் சுண்டி விட, சரியாக அந்த நேரம் அவன் அம்மா சுமித்ராவும் பேருந்தில் இருந்து இறங்கினார். சுமக்க மாட்டாமல் கை நிறையப் பைகளை வைத்துக் கொண்டு வந்தவரிடம்,

 

“இப்படிக் குடுங்கம்மா”, அவசரமாக அனைத்தையும் வாங்கியவன் அவரைக் கடிந்து கொண்டான்.

 

“சொன்னா கேக்கிறதில்லை. நான் தான் நாளை மறுநாள் இல்லை புதன்கிழமை போகலாம்னேன்ல. அப்படி என்ன அவசரம் உங்களுக்கு. அலுங்காம குலுங்காம நம்ம கார்லயே போயிட்டு வந்திருக்கலாம்”

 

“இப்ப என்னடா.. கொஞ்சமா அலுப்பு தான். வேறொன்னுமில்லை”

 

“வேற யாரையாவது பிடிச்சு அனுப்பலாம்னா பாபு, சீனி, அரவிந்து, சத்தி எவனும் அகப்படல. பெரியம்மாட்ட ராத்திரியே பேசுனீங்கள்ல. அப்படியே என்ட சொல்லியிருக்கலாம்ல. பயலுகிட்ட சொல்லி வச்சிருப்பேன். திடுதிப்புன்னு காலைல சொன்னா எவெனப் பிடிக்க”

 

“அர்ஜூன், கொஞ்சம் மூச்சு விட்டுக்கோடா. அதான் பத்திரமா போயிட்டு வந்திட்டேன்ல. கூல் விடுடா விடுடா”

 

எண்ணெய் சட்டியில் சொய்ங் சொய்ங் என்று விழுந்த உடனே பொரிந்து எம்பும் பக்கோடா மாவைப் போல் பொரிந்த மகனை கூலாகக் கூலாக்க முனைந்தார் சுமித்ரா பைக்கில் அமர்ந்தபடி.

 

“மருமகளுக்குன்னா உனக்கு அலுப்பே தெரியாதில்ல மம்மீ. இன்னைக்கி மதுரைக்குப் பறந்து ஜவுளிக்கடைல பரபரன்னு ஷாப்பிங். போத்தீஸ், சென்னை சில்க்ஸ், இன்னும் தர்ஷிக்கிப் பிடிச்ச பொட்டீக்லயும் வாங்கிக் குவிச்சாச்சா. இம்புட்டுக் கனம் கனக்குது?”

 

“ஹி ஹி… கார்ல போயிருந்தா இன்னும் அள்ளியிருக்கலாம்டா”

 

“யம்மோவ்!! அதான், நாளைக்கு இங்கன தேனியில நகக்கடைக்குப் படையெடுக்கப் போறீங்கள்ல. அப்ப வாங்கிக்கலாம். உங்க கூட்டாளி சுஜாதா கூட நாளைக்கு ஃப்ரீயாமில்ல”

 

“அதெல்லாம் மதுர கீர்த்திலால்லயே எம்மருமகளுக்குப் பிடிச்ச மாதிரி சிறுசா நறுக்கா ரெண்டு வைரக்கம்மல் வாங்கியிருக்கேன்” என்று கூறி விட்டு, நங்கென்று மகன் தலையில் கொட்டினார்.

 

“பெரியம்மாவயா பேரு சொல்லிக் கூப்பிடுற. பயமே அத்துப் போச்சு”

 

“த்சு.. போம்மா வலிக்குதூஊ”

 

கொட்டு வாங்கிய வேகத்தில் பைக் அவன் கைகளில் உறுமி பறந்தது. அவன் வேகத்தைக் கண்டு மிரண்டவராகச் சுமித்ரா,

 

“அப்பனே கிருஷ்ணா காப்பாத்துய்யா! வீட்டுக்குப் போகச் சொன்னா எம்மவெ பரலோகத்துக்கில்ல ரூட்டுப் போடுறான்”, என்க,

 

உடனே வேகத்தைக் குறைத்துக் கொண்டான் அர்ஜூன்.

 

“பரலோகத்துக்கில்லம்மா, எமலோகத்துக்கு! கிருஷ்ணான்னு உங்க புருசன எல்லாம் உதவிக்குக் கூப்பிட்டா, நாங்க தொடை நடுங்கிடுவோமா. இப்பத்தேன் கணக்குவழக்க முடிச்சுட்டு அக்கடான்னு மூச்சு விட்டிருப்பாரு. அதுக்குள்ள கூப்பிட்டுக்கிட்டு.. மனுசென நிம்மதியா விட மாட்டியே மம்மி நீ?”

 

சவாலோடு சவடாலாகப் பேசிய மகனின் பேச்சில் சிரித்துவிட்டார் சுமித்ரா. தன் கணவர் கிருஷ்ணசாமியை நினைத்ததும் மேலும் சிரிப்பு பீரிட்டது. “அவர் வந்து காப்பாத்திட்டாலும்… மண்டிய விட்டு நகர மாட்டாரு மனுசன்”

 

அம்மாவிடம் வளவளத்துக் கொண்டே வந்தான் அர்ஜூன். தங்கள் வீடு இருக்கும் தெருவுக்குள் நுழையும் முன் பைக்கின் வேகத்தைக் குறைத்தபடி,

 

“சொல்ல மறந்துட்டேனே. வீட்ல ஒரு டெரர் வந்து எறங்கியிருக்கு மதியம்”

 

“யாருடே.. உன் அத்தையா வந்து இறங்கியிருக்கு. வயித்துல புளிய கரைக்கிறியே”

 

“அத்த கனகவல்லிய கூடச் சமாளிச்சுறலாம். வந்திருக்கிறது அத்த பெத்த மெத்தனம் அமிர்தவல்லி.. அமிர்தவல்லி பராக் பராக் பராக்…”

 

“ஐய்யய்யோ! அவ இவ்வளவு பைகளையும் பார்த்தா அம்புட்டுத்தேன். பெருமூச்சு விட்டே செத்துப் போயிருவாளே. அதுவும் தர்ஷிக்கின்னு தெரிஞ்சது ஹய்யோ! டேய் டேய் அர்ஜூன், உனக்குப் புண்ணியமா போகும். அப்படியே உங்க பெரியப்பா வீட்டுக்கு வண்டியை திருப்பி விடுடா. சீக்கிரம் சீக்கிரம்”

 

“சரி சரி. உங்க மச்சினர் வீட்டுக்கே போயிரலாம். கூல் டௌன் மம்மி!”

 

“ஆமாம்டா. பெரியம்மாட்ட எல்லாத்தையும் ஒப்படைச்சுட்டா, பெட்டில அடுக்கி வச்சிருவாங்க. பார்த்திய நம்ப முடியாது. வெள்ளிக்கிழமை போறேன்னு சொன்னவன், நாளைக்கே கூடக் கிளம்பிருவான்”

 

“ம்ம்ம்.. தொர அவரு மனசு போலத்தான நடப்பாரு”

 

“சும்மா இருடா. உனக்குப் பார்த்தி மேல ஏங்கோவம் வருது. தர்ஷினிய இவனா போகச் சொன்னான்”

 

“ஏம்மா, உங்க சொந்த அண்ணன் மகளை விட மச்சினர் மகன் தான் உங்களுக்கு ஒசத்தியாப் போயிட்டான்ல?”

 

“பார்த்திய பத்தியும் தெரியும். என் அண்ணன் மகளையும் நல்லாத் தெரிஞ்சதாலத் தான் சொல்றேன்”

 

“பாவம் ம்மா தர்ஷி. மாமா அத்த இருந்திருந்தா அவ லைப் வேற மாதிரி போயிருக்கும்”

 

“எங்க அண்ணிக்கு வாழ குடுத்து வைக்கல. மகராசி வெரசா போய்ச் சேர்ந்துட்டா. அந்தக்கவலையே அண்ணனையும் அரிச்சி விழுங்கிருச்சு. ஆனா, எங்கண்ணன் போறதுக்கு முன்னாடி தர்ஷிக்கு நல்லது செஞ்சிட்டு தான போனாரு. அவ புரிஞ்சிக்கல. இப்பவும் அவ லைப் என்னடா கெட்டுப் போச்சு. எல்லாம் அவ கைல தான் இருக்கு”

 

சில நிமிடங்கள் அமைதியாகக் கரைந்தன. உணர்ச்சிவசப்பட்டிருக்கும் அம்மா அழுவது புரிந்தது.

 

“ம்மா..”

 

“…”

 

“ம்ப்ச்.. ம்மா, அழாதீங்க”

 

அதற்குள் இருபது நிமிட தூரத்தில் இருந்த அந்த அழகிய பங்களா வீட்டின் முன் அர்ஜூனின் பைக் நின்றிருந்தது.

 

“கண்ண தொடச்சிக்கோங்கமா. பெரியம்மா பார்த்தா சங்கடப்படுவாங்க”

 

“ம்ம்”

 

பார்த்திபனின் பைக்கும் ஹம்மரும் நிறுத்தப்பட்டு இருந்ததைக் கண்ட அர்ஜூன்,

 

“தொர வீட்ல தான் இருக்காப்ல”

 

“அர்ஜூன்ன்! தர்ஷிக்காக நீ ஏன்டா பார்த்திட்ட மோதுற. இது சரியில்ல சொல்லிட்டேன். உனக்கு அண்ணன் அவன். உங்க பாசம் எங்கடா போச்சு”

 

“எங்க பாசம் எங்க கொடைக்கானல் மலையேறியாப் போகப் போகுது. அதெல்லாம் அப்படியே தான் இருக்கு சித்தி”

 

திடீரென்று ஒலித்த பார்த்திபனின் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தார் சுமித்ரா. ஹம்மரின் மறுபுறம் சாய்ந்து நின்றிருந்தான் பார்த்திபன். மார்பின் குறுக்கே கை கட்டி நின்றபடி புன்னகையுடன் அவர்களை வரவேற்றான்.

 

“வாங்க சித்தி.. வாடா அர்ஜூன்”

 

“நல்லாயிருக்கியாய்யா.. நீ தேனிப் பக்கம் வரவே இல்லைய்யா பார்த்தி”

 

“அதெல்லாம் தேனிக்குள்ள தினமும் வந்திட்டு தான் இருக்காரு. நம்ம வீட்டுப் பக்கம் தான் வரல”

 

அர்ஜூன், அனல் தெறிக்கும் பார்வையுடன் பார்த்திபனை பார்த்தான்.

 

“வர்றேன் சித்தி. நீங்க உள்ள வாங்க”

 

தன்னிடம் பேசாமல் பைகளுடன் விரைப்பும் முறைப்புமாய் மோதிக்கொண்டு உள்ளே செல்லும் தம்பியை வெளிப் புன்னகையுடனும் உள் மனவலியுடனும் தொடர்ந்தான் பார்த்திபன்.

 

‘உன்னால் தானேடி என் ப்ரியசகியே? வர்றேன் வர்றேன்டி… காத்திரு! ம்கூம், உனக்குத் தான் நான் வேண்டாமே.. பிறகெங்கே காத்திருக்கப் போறே’

 

இதயம் சுணக்கம் கொண்டதால் சட்டென அவனின் இதழோரம் கசந்த முறுவல் வந்திருந்தது.

~~~~~

Advertisements

6 thoughts on “விலகிடுவேனா இதயமே 02

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s