என் விழியில் உன் கனவு

என் விழியில் உன் கனவு

எதிர் எதிரே அமர்ந்திருந்த இருவரின் முகங்களிலும் அத்தனை உணர்வு கலவைகள்.

அவன் எரிமலையின் கனலை அடக்கியபடி அவளைக் கூர்மையாகப் பார்த்து “பேசுவதற்கு முன்னால் என்னிடம் கேட்க மாட்டியா?” என்றான் கடுமையாக.

அவளோ உன் கோபம் என்னைப் பாதிக்காது என்கிற வகையில் “ஏன் கேட்கணும்?” என்றாள்.

சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து, “இனி, எதற்கும் என்னை எதிர்பார்க்காதே” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து சென்றான்.

“போடா! போ போ. எதிர்பார்க்காதேவாம்! தேவையில்லை எதுவும். நான் அவங்க கிட்ட பேசினது எல்லாம் உனக்காகத் தான்.”

கிருஷ்ணலேகா தன் தலை சாய்த்து, விலகிப் போகும் பிரசன்னாவையே பார்த்துக்கொண்டு சில நொடிகள் நின்றாள்.

நட்பு என்றால் கிருஷ்ணலேகா எனப் பொருள் கொள்ளலாம். அத்தனை ஆழம்! எல்லோரிடமும் வெகு சுலபமாகப் பழகக் கூடியவள் அல்ல. ஆனால், அவளுக்கு ஒருவரை பிடித்துப் போனால், தன் நொடி நேரங்களில் கூட நட்பை சுவாசம் எனக் கொண்டிருப்பவள்.

கிருஷ்ணலேகா, பிரசன்னா இருவரும் ஒரே பள்ளியில் பயில்பவர்கள். அருகருகே வசிப்பவர்களின் பழக்கம் வீடு வரை வேரூன்றியது.

பிரசன்னாவுடன் லேகா கொண்டுள்ள நெடு நாளைய நட்பு, இன்று அவளைத் துணிச்சலாக ஒரு செயலை செய்யத் தூண்டியிருக்கிறது. எப்படி வந்தது அந்தத் தைரியம்? அவள் வயதையும் மீறிய பேச்சுத்தான். அதுவும் பெரியவர்களிடம்! அதனால் தான் பிரசன்னாவிற்கு ரொம்பக் கோபம்.

“ஏன் அங்கிள் பிரசன்னவை டெல்லிக்குப் போக வேண்டாம்ன்னு சொல்றீங்க? அவன் டேலண்ட்ஸ் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? எப்பப் பாரு வேலை வேலைன்னு சுத்திட்டு இருக்கீங்க. அவன் மேல் கொஞ்சமாவது அக்கறை இருக்கா உங்களுக்கு?

ஆன்ட்டிக்கு அவனைப் படி படின்னு ஒரே டார்ச்சர் பண்றது தான் வேலை. டாக்டர், இன்ஜினியரிங் இப்படிப் படிக்கணும், அதானே உங்களுக்கெல்லாம்? உங்க மகன் படிப்பைத் தாண்டியும் எதிலெல்லாம் ஆர்வம் வச்சு திறமையை வளர்த்திருக்கிறான். அதையெல்லாம் நீங்க யோசிக்க மாட்டேங்கறீங்க.”

“இல்லம்மா லேகா…”, பிரச்சன்னாவின்அப்பா பேச ஆரம்பிக்க,

“ப்ளஸ் டூல இருக்கும் போது…”, அதே நேரம் அவனின் அம்மாவும் ஏதோ சொல்ல வர, எங்கே இவள் பேச விட்டால் தானே?

“ப்ளஸ் டூ படிக்கிறான்னு காரணம் சொல்லி சப்பைக்கட்டு கட்டாதீங்க ரெண்டு பேரும். ஏன் இப்போ என் பேரண்ட்ஸ் என்னை அனுப்பி வைக்க ரெடியா இருக்காங்க தானே? நானும் பிரசன்னா க்ளாஸ்ல தான் படிக்கிறேன். அவன் நல்லா தானே படிக்கிறான். அப்புறம் என்ன ஆன்ட்டி? அம்மா, அப்பாவா படிப்பைத் தாண்டியும் அவனுக்குக் கனவு இருக்குங்கிறதையாவது தெரிஞ்சு வச்சிருக்கீங்களா? ம்கூம்… இல்லை தானே!”

அந்நேரம் பிரசன்னாவின் வேதனை மட்டுமே அவளை ஆக்கிரமித்து இப்படிப் பேச வைத்திருந்தது.

பிரசன்னாவின் படிப்பு வெறும் பாடப் புத்தகங்கள் மட்டுமல்ல. அவற்றைத் தாண்டி கலையிலும் விளையாட்டிலும் தேர்ந்தவன். வரைவதில் மிகுந்த ஆர்வமானவன். எத்தகைய சூழலையும் எளிதாக வடித்து விடும் திறன் அவனுக்குண்டு. பேப்பர், ஃபேப்ரிக், கேன்வாஸ் என வகை வகையாகத் தன் கைவண்ணத்தில் வரைந்து, வண்ணங்களுடன் ஜாலம் செய்து வைத்திருக்கிறான்.

சமீபத்தில் பள்ளியில், சுவர் சித்திரமாக ம்யூரல் ஆர்ட் (Mural art) ஒன்றை வரைந்து அனைவரின் பாராட்டைப் பெற்ற பிரசன்னாவைக் கண்டு லேகாவிற்குப் பெருமிதம். லேகாவிற்கும் இக்கலையில் ஆர்வம் உண்டு. நன்றாக வரைவாள் தான். ஆனாலும் அவனின் திறமை அலாதியானது.

பன்னிரெண்டாம் வகுப்பின் தொடக்கத்தில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அரிதாக ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. தலைநகரத்தில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான சித்திரம் வரைதல் போட்டி!

இருவரும் சில வாரங்களுக்கு முன், செய்தித்தாளில் வந்திருந்த போட்டிக்கான விண்ணப்பித்தல் அழைப்பிற்கு ஆசையாக விண்ணப்பம் அனுப்பி வைத்திருக்க, கலந்து கொள்வதற்கான அழைப்பும் வந்துவிட்டது.

இருவருக்கும் பள்ளியில் புதுத் தில்லி செல்ல அனுமதி கிடைத்துவிட்டது. ஆனால், அந்த நாட்களில் சொல்லித் தரும் பாடங்கள் இவர்கள் பொறுப்பு. இவர்கள் திரும்பி வந்ததும் காலாண்டுத் தேர்வுகள் தொடங்க இருப்பதால், இவர்களும் அதே தேதியில் எழுத வேண்டும்.

அதனால் தான் பிரசன்னாவின் பெற்றோர், “வேண்டாம்! அடுத்த வருடம் கல்லூரியில் சேர்ந்ததும் போய்க் கொள்!” என மகனிடம் சொல்லிவிட்டனர்.

அடுத்த வருடம் இப்படித் தங்கள் விண்ணப்பம் தேர்ந்தெடுக்கப்படுமா? கிடைத்த வாய்ப்பை விட வேண்டாமே! தன்னைவிடப் பிரசன்னாஎவ்வளவு ஆவலாகக் காத்திருந்தான்? அவனின் கனவு இப்படியொரு பெரிய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பது தானே? எப்படித் தவற விடுவதாம்?

அவனின் பெற்றோர்களிடம் சென்றவள் பொங்கிவிட்டாள்!

அதான் பிரசன்னா அப்படிக் கோபத்தை காட்டியது.

இரண்டாம் நாள் இரவு, பிரசன்னா லேகாவின் வீட்டு தொலைபேசிக்கு அழைத்தான்.

“டீ கிருஷ்! அம்மா அப்பா ஓகே சொல்லிட்டாங்கடீ! அவங்க ரெண்டு பேரும் நம்ம கூட வர்றாங்களாம். தாங்ஸ் டீ! நான் ரொம்பச் சந்தோசமா இருக்கேன்!”

“ஹே! சூப்பர் மச்சி! அப்போ எனக்கு நாளைக்கு ஒரு கிட்கேட் சாக்லேட் பார் வாங்கித் தரணும். சரியா?”

“முடியாது போடி! என்கிட்ட இனி எதையும் எதிர்பார்க்காதேன்னு சொன்னேனில்ல? அதெப்படிடி அப்படிப் பொங்கி பொங்கி பொங்கல் வச்ச? அப்பா அம்மா பெரியவங்கன்னு யோசிச்சுக் கொஞ்சம் நிதானமா எடுத்து சொல்லியிருக்கலாம்ல…”

“சாரிடா! நீ ரொம்ப ஃபீல் பண்ணினேல்ல, அதான் அப்படிக் கோபம் வந்துருச்சு. நான் வந்து அங்கிள், ஆன்ட்டி கிட்ட மன்னிப்பு கேட்கிறேன்.”

“வேண்டாம் போடி!” இப்படி முறுக்கிக் கொண்டவன் தான் மறுநாள் காலையில், முகம் கொள்ளா புன்னகையோடு இரண்டு கிட்கேட் சாக்லேட்டுடன் போய்க் கிருஷ்ணலேகா முன் நின்றான்.

நட்பின் ஆழம் அளவுகோல் கொண்டு அறிவதல்ல. செயல்களும் துடிப்பும் சொல்லும் தோழமைகளின் பிரியங்களை!

இருவர் குடும்பங்களும் ஒன்றாகவே புதுத் தில்லி சென்றனர். பயண முடிவில் கிருஷ்ணலேகா ஆர்ப்பரித்துக் குதித்துக் கொண்டிருந்தாள். அவள் ஆறுதல் பரிசைக் கூட வென்றிருக்கவில்லை. முதல் சுற்றின் முடிவிலேயே வெளியே வந்திருந்தாள்.

அவளின் இத்தனை மகிழ்ச்சியும் ஆர்ப்பாட்டமும் பிரசன்னாவிற்காகவே! தேசிய அளவில் இரண்டாம் பரிசை வென்று விட்டான். அவனின் பெற்றோர்கள் நீர்த்திரையிட, லேகாவை அணைத்து நன்றி சொல்ல,

“ஹலோ, ஹலோ! நான் தானேப்பா வெற்றி பெற்று வந்திருக்கேன். அவளுக்கு எதுக்கு ஹக் தர்றீங்க?”

வேண்டும் என்றே இடையில் புகுந்தான் பிரசன்னா. அங்கே கனவொன்று நிஜமானதால் பெரும் மகிழ்ச்சி அலை பரவியது.

~~~~~~~~

Advertisements