கற்போம், பிழைகளின்றி எழுதுவோம் 01-05

கற்போம், பிழைகளின்றி எழுதுவோம் 01

உன்னில் பிழை,

என்னில் பிழை,

நம்மில் பலரும் பிழைகளின் ஊடே பயணிக்கிறோம்;

அவை பிழைகள் என்று அறியாமல்!

இனிய வணக்கம்! அனைவரும் நலமா?

என்னைப் பற்றிச் சில வரிகள். பள்ளி இறுதி வரை தமிழ் ஒரு மொழிப் பாடக் கல்வி மட்டுமே. ஏனைய அனைத்தும் ஆங்கில வழி கல்வி முறையில் பயின்றேன். இன்னும் பயில்கிறேன். எனது தாய்மொழியும் தமிழல்ல. புகுந்த வீட்டில் பேசும் மொழியும் வேறு. தற்போது நாங்கள் வசிக்கும் நாட்டில் ஆங்கிலம் தான் பிரதானம்.

இதனால் உங்களிடம் நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், நான் தமிழ் ஆசானல்ல. ஆங்கில ஆசானுமல்ல. எனது படைப்புகளும் பிழைகளுக்கு விதி விலக்கல்ல. அவற்றை வாசிக்கும் உங்களுக்கும் தெரிந்திருக்கும். எனது பிழைகளையும் என்னிடம் சுட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

தமிழ் எனும் மகா சமுத்திரக் கடலில் நான் கற்ற, கற்றுக் கொண்டிருக்கிற துளி கல்வியை, மிக எளிய முறையில் தங்களிடம் பகிர்ந்து கொள்ளவே வந்திருக்கிறேன்.

இன்றைய இணையதளம் தான் நம் அனைவருக்கும் மிகப் பெரிய கல்விக்கூடம். அன்றாடம் நாம் காணும் பதிவுகள் மனதில் பதிந்து, நம்முடைய எழுத்துக்களிலும் எண்ணங்களிலும் வெளிப்படுகின்றன. அவற்றின் தரத்தை உயர்த்துவோம். என்னுடன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். நம்மால் முயன்ற வரை சராசரியாகக் காணும் பிழைகளை களைவோம்.

நாம் பார்க்கப் போகும் பிழைகள் யாவும் பொதுவாக நிறையப் பேரிடம் கண்டவை. இன்னாரிடம் மட்டும் பிழைகளைச் சுட்டிக்காட்டி விட்டுப் போய்விடலாம். ஆனால், வருந்தத்தக்க வகையில் நிறையப் பேரிடம் காண்பதைப் பொதுவில் வைப்பது தானே சரி?

தடம் பதித்துக் கொண்ட எழுத்தாளர்கள், ஓரிரு வருடங்களாக எழுதுபவர்கள், புது வரவுகள், இனி பிரவேசிக்கப் போகும் எழுத்தாளர்கள் எனப் பாகுபாடின்றி அனைவரும் பயன்பெற்றுக் கொள்ளலாம்.

எழுத எழுத தான் எழுத்துச் செம்மைபடும். பிழைகள் என்று தெரியாமலேயே மீண்டும் மீண்டும் அவற்றையே எழுதினால்? நம் எழுத்துக்களைக் கொண்டு, வாசகர்களும் அவ்வழியாகப் பயணிக்கிற அபாயம் அச்சுறுத்துகிறது!

நிற்க: எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் (எளியவை மட்டும்), நிறுத்தக்குறிகளுள் முக்கியமாக முற்றுப்புள்ளி வலியுறுத்தல். இவை தான் எனது முதன்மை நோக்கம்.

அன்புடன்,

ஆர்த்தி ரவி

கற்போம், பிழைகளின்றி எழுதுவோம் 02

தோழமைகளுக்கு இனிய வணக்கம்!

பந்திக்கு முந்துறேங்களோ இல்லையோ, சந்திக்காக முந்தி வந்து போர்வை, கம்பளி விரித்துக் காத்திருக்கும் அன்புள்ளங்களை காணும் போது, என் கண்கள் வேர்க்கின்றன. சந்தியும் நானும் எதிரும் புதிரும்!

என்ன செய்யலாம்? முடிந்த வரை முயற்சி செய்கிறேன். இப்போதைக்கு எளிய பாடங்களைத் தொடங்குவோம். சரியா?

முற்றுப்புள்ளி:

Full stop என்று ஆங்கிலத்திலும் கற்பிக்கப்பட்ட ஒற்றைப்புள்ளிக்கு முற்றுப்புள்ளி என்று பெயர். நினைவிருக்கா மக்களே? இல்லையென்றால் கீழே பாருங்கள்.

.

ஒரு வாக்கியத்தின் முடிவை குறிக்கும் நிறுத்தக்குறிகளில் நாம் அதிகம் பாவிப்பது முற்றுப்புள்ளியைத் தான்.

உதாரணங்கள்:

ஆருஷின் துணிவைக் கண்டு யாஷ்வியின் பார்வை மாறிப் போனது. இனி காலதாமதம் செய்வது சரியல்ல. முடிவெடுத்து விட்டாள்.

சிரிக்கிறாயா? சிரி. சிரித்துக் கொள்! இன்று உனக்கு உகந்த நாளாக இருக்கலாம். நாளை என்ன நடக்கப் போகிறது என்பதை நீ அறிந்திருக்கவில்லை என்று புரிகிறது.

பொதுவில் காணும் தவறுகள்:

எனக்கு ஓர் உண்மை தெரிஞ்சே ஆகணும் மக்களே!

…………..

…..

………

…………………

இப்படி, விதவிதமாக நீங்கள் வைக்கும் புள்ளிகளுக்கு என்ன அர்த்தம்? சத்தியமாக எனக்குப் புரியவில்லை. நான் கற்றுக் கொண்ட மூன்று மொழிகளிலும் இவற்றைக் கண்டதில்லை. இல்லை மறந்து விட்டேனா?

எங்கோ, யாரோ, எப்போதோ துவங்கி வைத்ததை நம்மில் பலர் பின்பற்றுகின்றனர். அந்தோ பரிதாபம்! தெரியாமல் துவக்கி வைத்தவர்கள், இந்நேரம் சரி செய்து கொண்டிருப்பர்.

ஒரு கதை முழுக்க முற்றுப் புள்ளிகள், ஆச்சரியக்குறிகளுக்குப் பதிலாக இப்படிப் பல விகிதத்தில் தொடர்ப் புள்ளிகள்! இணையதளத்தில் மட்டுமின்றிப் புத்தக வடிவிலும்! பதிப்பகத்தார் கண்டு கொள்வதில்லையா?

நிறையப் பேர் இப்படி முற்றுப்புள்ளி வைக்காமல் எழுதுகிறார்கள். வாசிக்க வருபவர்களை இதனால் பின்னங்கால் பிடறியில் பட ஓட விடுவது போல் தெரிகிறது. கண் உறுத்தலால் வாசிக்காமலேயே வெளியேறுகிறோம்!

என் முதல் கதையில், … மூன்று புள்ளிகள் கொண்ட நிறுத்தக்குறிகள் சற்று விஞ்சிவிட்டது. திருத்தத்தின் போது சிலவற்றை அகற்றிவிட்டிருந்தாலும், இன்னும் நீக்கி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

எழுதும் போதே முற்றுப் புள்ளிகளைச் சரியாக வைத்து விடுங்கள். விசைப்பலகைக்கு வலிக்கவா போகுது எனும் நோக்கில் புள்ளிகளை அள்ளி வீச வேண்டாம்!

நன்றி!

அன்புடன்,

ஆர்த்தி ரவி

கற்போம், பிழைகளின்றி எழுதுவோம் 03

தோழமைகளுக்கு இனிய வணக்கம்!

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் மனதை அரித்துக் கொண்டிருந்த விடயம். எனையறியாமலேயே ஒவ்வொரு வாசிப்பின் போதும் பிழைகளைத் திருத்தியபடி (மனதில் தான்) சென்று கொண்டிருக்க, எழுதுவதைப் போலவே வாசிப்பும் நேரம் எடுப்பதாய்! ஏதாவது செய்தே ஆக வேண்டும். சின்னதாகவே வேணும். இனி வாளாவிருப்பது உறுத்திக் கொண்டிருக்க, வந்து விட்டேன் உங்கள் முன்பு.

சரியோ, தவறோ! சந்திக்கு அஞ்சித் தான். ஹஹா…

முடியுமோ, முடியாதோ! என் வேகத்தைப் பொருட்படுத்தாது மூன்று நாவல்களில் கை வைத்த நிலையில், தேவையா? வாசகர்களின் அதிருப்தியை சம்பாதிக்கப் போகிறேன். பரவாயில்லை. முடியும், மனது வைத்தால்.

நேற்றைய உங்களின் உற்சாகமும் ஊக்கமும் சந்தோஷம் அளிக்கிறது மக்களே, நன்றி!

கேள்விக்குறி, ஆச்சரியக்குறி:

நிறுத்தக்குறிகளில் மிக அழகானவை. எனக்குப் பிடித்தவையும் கூட.

கேள்விக்குறி (Question mark) ?

இதை எப்படி உதாசீனப்படுத்த முடியும்? நம் ஒவ்வொருவரின் மனதிலும் அத்தனை கேள்விகள். நித்தமும் நமது பேச்சிலும் வெளிப்படுகின்றன. செவிகளிலும் விழுகின்றன. அப்புறம் நமது எழுத்தில் சரிவரப் போட்டுக் கொள்ள வேண்டும் தானே? தயக்கம் ஏனோ?

ஒரு கேள்வியின் முடிவில் கண்டிப்பாகக் கேள்வி நிறுத்தக்குறி வர வேண்டும்.

ஆச்சரியக்குறி (Exclamation mark) !

இந்த நிறுத்தக்குறியின் உபயோகங்களை ஞாபகம் வைத்துக் கொள்வது மிகவும் எளிது. அதிர்ச்சி, ஆச்சரியம், கண்டிப்பு, கட்டளை எனும் உணர்வுகளின் வெளியிடலின் முடிவில் இக்குறி வர வேண்டும். இதன் பயன்களைப் போல் பார்வைக்கும் அழகல்லோ?

உதாரணங்கள்:

பெரிய இவ மாதிரி பேசுற, உனக்கு என்ன தெரியும்? அங்க வந்து பார்த்தியா நீ? முழுசா தெரியாம எதையும் சொல்லக் கூடாது! புரிஞ்சதா?

யார் ரிஷி அந்தச் சூர்ய பிரகாஷ்? உனக்கெப்படி அவரைத் தெரியும்டா? ஹனியின் உணர்வுகளைப் புரிஞ்சுக்க முடியுது. ஆனால், உனக்கு என்ன ஆச்சு? ஏன் அப்படி நின்று கொண்டிருந்தாய்?

ஹனியா? வாரேவா! அப்படிப் போடு! எப்போதிலிருந்து இப்படி?

ஆஹ்! என்ன, என்ன சொல்ற! வந்துட்டானா, ஹோ! நான் இங்க இல்லைன்னு சொல்லிவிடு!

வாவ் ப்யூட்டி! என்கிட்டயே பொய் சொல்லச் சொல்லுமாம், என் க்யூட்டி! வேண்டாம், அடம் பிடிக்காதே ஸ்வீட்டி!

வாவ் பிரஜா!

ஹலோ ராம்!

டேக் கேர் தங்கம்!

வாவ்! செம அழகு!

ப்யூட்டிஃபுல் டா!

அன்புடன்,

ஆர்த்தி ரவி

கற்போம், பிழைகளின்றி எழுதுவோம் 04

தோழமைகளுக்கு இனிய வணக்கம்!

நிறுத்தக்குறிகளுள் ஒன்று காற்புள்ளி. ஆங்கிலத்தில் comma என்று அழைக்கப்படும் காற்புள்ளியின் பயன்கள் ஏராளம். எங்கு, எப்படி, ஏன் உபயோகப்படுத்துகிறோம் என்பதை எளிய வகையில் உதாரணங்கள் கொண்டு பார்க்கலாம்.

ஒரு கட்டுரை, கடிதம், கதை என எதை எழுதினாலும் அழகுற எழுத வேண்டும் என்பதற்காகத்தான் நிறுத்தக்குறிகள். ஒரு வாக்கியம் அமைக்கும் போது வாசகர்களுக்குத் தெளிவாகப் புரியும்படி இருப்பது மிக அவசியம்.

வினைகள், வர்ணனைகள், உணர்வுகள், பெயர்கள், பொருட்கள், இடங்கள், இப்படி ஒரே வாக்கியத்தில் இரண்டிற்கும் மேற்பட்டு உபயோகிக்கும் போது, அங்கு ஒவ்வொன்றையும் பிரித்து வகைப் படுத்துவதற்காகக் காற்புள்ளியை உபயோகப்படுத்துகிறோம்.

இன்னும், வாக்கியங்கள், சொற்றொடர்கள் என ஒவ்வொன்றின் இடையே, அவற்றின் அர்த்தம் மாறிப் போகாமல் காப்பதும் காற்புள்ளியின் வேலை.

உதாரணங்கள்:

கல்பாவும் சில்பாவும் நெருங்கிய தோழிகள். (இங்குக் காற்புள்ளிக்கு அவசியம் இல்லை)

கல்பா, சில்பா, தீபா மூவரும் நெருங்கிய தோழிகள். தீபாவிற்குப் படிப்பை விட, நாட்டியமும் பாட்டும் முக்கியம். கல்பா படிப்பிலும், சில்பா விளையாட்டிலும் கெட்டி.

ஷாம் ஆணழகன் தான் என்றாலும், கர்வம், திமிர், அலட்சியம், உதாசீனம், கோபம், பொறுக்கித்தனம் என மொத்த கெட்ட குணங்களைக் கொண்ட பணக்கார வாலிபன்.

ரோஜா மலரே ராஜகுமாரி, உன் அருகில் வரலாமா?

நம் உதடுகள் தொட்டுக் கொள்ள வேண்டும் என்றால், நீ புகைப்பதை நிறுத்த வேண்டும்!

மேகக் கருங்கூந்தல், பிறை நெற்றி, கூர் மூக்கு, ஆரஞ்சு சுளை இதழ்கள், வெண்டைப்பிஞ்சு விரல்கள், வாழைத்தண்டு கால்கள். ஹஹா! எத்தனை காலத்துக்கு இப்படியே வாசிப்பதாம்? ம்கூம், பிடிக்கலை. மாத்தி யோசிங்க, டார்லிங்ஸ்!

“ப்ரியா!”, வலிக்குமோ என்று உதிர்ந்த மெல்லிய உச்சரிப்பு, ஆழ்ந்த ஊடுறுவும் பார்வை, இரு கைகளைக் கட்டிக்கொண்டு, கதவில் சாய்ந்து நின்ற ஒய்யாரத் தோரணையுடன் பார்த்திபன் நோக்க, அவ்வளவு தான், சுவாசம் நின்றே போனது ப்ரியாவிற்கு!

வேலை, கம்ப்யூட்டர், செல், டிவி, இப்படி எதுவுமே இல்லாம, நீயும் நானும் மட்டும், தனியா, யாருமே தொந்தரவு பண்ணாத இடத்துக்குப் போயிரணும். பாட்டு, காதல், ரொமான்ஸ், வெட்டவெளி வட்ட நிலா, கருநீல வான் நட்சத்திரங்கள், திடீர்ன்னு மாறும் மழைமேகம் நிலாச்சாரல்… நினைச்சாலே ஜிவ்வுன்னு இருக்கு அம்மணி!

ஆமாம், இருக்கும் தான். அப்படியே, ஆஃபீஸ்ல இருந்து கிக்ட் அவுட்ன்னும் வரும், ரெடிங்களா?

நன்றி!

அன்புடன்,

ஆர்த்தி ரவி

கற்போம், பிழைகளின்றி எழுதுவோம் 05

தோழமைகளுக்கு இனிய வணக்கம்!

அரைப்புள்ளி (Semi colon) ;

இந்த நிறுத்தக்குறியை நாம் அடிக்கடி பாவிப்பது இல்லை. காரணம், இவை வரும் இடங்களில் முற்றுப்புள்ளிகளை வைத்து விடுகிறோம். அப்படி வைப்பதும் தவறில்லை. அரைப்புள்ளியின் பயன்களை உதாரணங்கள் கொண்டு தெரிந்து கொள்வோம்.

உதாரணங்கள்:

முல்லைப்பூவின் மணம் மயக்கம் கொடுப்பதாக இருக்கிறது; ரோஜாக்களின் பல வண்ண அணிவகுப்பு விழிகளுக்கு அழகைக் கொடுக்கிறது.

இங்கு ரோஜாவும் முல்லையும் குறிப்பிட்டிருக்கிற குணங்களில் சமநிலையில் உள்ளவை.

விக்ரமன் காதலில் பொறுமை காட்டினான்; ஆரியன் காதலால் அதிரடியில் இறங்கினான்.

இங்கு விக்ரமனும் ஆரியனும் உறுதியான காதலில் நிற்கிறவர்கள்.

மதுரைத் தூங்கா நகரம்; சென்னை வந்தாரை வாழ வைக்கும் நகரம்; கோவைத் தொழில் புரட்சி நகரம்.

இங்கு மூன்று நகரங்களின் சிறப்பான விசயம், உழைப்பு. சமநிலையில் உள்ள சிறப்புப் பேசப்படுகிறது.

தயாளன் ஒரு சிற்பி; அவனின் கை வண்ணம் மிகவும் சிறப்பு; குரலில் ஆழுமை கொண்டவன்; அலட்சியப் போங்கு தென்படுபவனில், ஆண்மை ஒரு தனி அழகு!

இப்படிச் சமநிலை வாக்கியங்கள் இடம் பெறும் இடங்களில் அரைப்புள்ளி நிறுத்தக்குறிகள் இடம் பெறுகின்றன. சற்றுக் கவனித்துப் பாருங்கள்! இந்த வாக்கியங்கள் யாவற்றிலும், அரைப்புள்ளிக்குப் பதில் முற்றுப்புள்ளி வைத்தாலும் சரி தானே? இக்காரணத்தால் தான் அரைப்புள்ளிகளை நாம் அதிகம் காண்பதில்லை.

கற்கண்டு, தேன் மிட்டாய், பேரீச்சம்பழம், சாக்லேட்; ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை, வாழைப்பழம், திராட்சை; மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர்; பட்டுப்புடவை, தங்க வளைவி, பொன் முத்துச் சங்கிலி, மல்லிப்பூ; அக்கம் பக்கம், சொந்த பந்தம், அங்காளி பங்காளி, நட்பு வட்டம் எனப் பரிசம் போட விஜியின் வீட்டிற்குக் கிளம்பினான், நம் கருத்த மச்சான் அழகர்.

இந்த உதாரணத்தில் காற்புள்ளிகளைப் பாவிப்பதால், வாக்கியங்கள் கூறும் அர்த்தங்களை தனித்துக் காட்ட வேண்டி அரைப்புள்ளிகளைப் பயண்படுத்த வேண்டும்.

அடுத்து, முக்கால் புள்ளியுடன் வரும் அரைப்புள்ளிகளைக் காண்போம்.

யாஷ்வியின் குண இயல்புகள்: அதீத சிந்தனை; அமைதியான பிடிவாதம்; அலட்டலில்லா நட்பு; உறுதியான நேசம்; ஆழமான வேலைத்திறன்.

உலகின் முக்கிய நகரங்கள்: மும்பாய்; சென்னை; சிகாகோ; நியூ யார்க்; சான் பிரான்சிஸ்கோ; இலண்டன்; பாரிஸ்; பார்சிலோனா; பிரான்க்பர்ட்; ஆம்ஸ்டெர்டாம்; பிரசெல்ஸ்; சிங்கப்பூர்; மெல்போர்ன்; சிட்னி; அடிலெய்டு; துபாய்; அபு தாபி; ஷாங்காய்; பீஜிங்; பேங்காக்; பாக்தாத்; காரகஸ்; புத்தாபெஸ்ட்; டொரெண்டோ; வான்கூவர்…

கவி வரிகளில் உதாரணம்:

ஓ பேபி, பேபி!

அழகுப் புறா; அமிர்த நிலா;

நீ நேசக் கவிதையடி,

என் சுவாசப் பைங்கிளியே!

படப் படவென எகிறுதே இதயத்துடிப்பு;

ஜில் ஜில்லெனப் பரவுதே இரத்த நாளங்களில் சிலிர்ப்பு;

நீ விழி முன் தோன்றினால்,

ஹோ ஹோ பேபி, பேபி!

நிற்க:

பாலர் பாடம் போல் மிக இலகுவான முறையில், சுவாரசியமான உதாரணங்கள் கொண்டு, வேறு எந்தப் புத்தகத்தைப் புரட்டாமல், முழுக்க முழுக்க என் சொந்த மூளையில் பதிந்துள்ள புரிதலில், எனது வரிகளில் தந்து கொண்டிருக்கிறேன். பிழைகள் இருக்கலாம். சுட்டுங்கள். விவாதித்து நிவர்த்திச் செய்து கொள்ளலாம். நம் முன்னோடிகள் உதவிக்கு வருவர்.

கவனிக்க:

பதிவுகளை நீங்களும் பகிர்ந்து கொள்ளலாம், என் பெயருடன்!

உங்களுக்காக, எப்போதும் பார்த்துக் கொள்ள ஏதுவாக,

http://www.arthyravi.wordpress.com

இங்கும் பதிய இருக்கிறேன். அதனால் tag-யில் தங்கள் பெயர் விட்டுப் போனால், மன்னியுங்கள்!

நன்றி!

அன்புடன்,

ஆர்த்தி ரவி

Advertisements