மது

துளித் துளியாகச் சேமித்து வைத்தேன்,

என்றேனும் ஏக்கம் கொண்டு

தேடுவேன் என்று அறியாமல்…

இன்று என் மதுக்கிண்ணத்தில்

இட்டு நிரப்பிக் கொண்டு இருக்கிறேன்…

நான் உரிஞ்சிட்ட

உனது இதழ் அமு(ம)து ரசத்தை!

~~~ ஆர்த்தி ரவி

Advertisements
Aside

தொடு பேசி காதல்

தொடு பேசி திரையும்

முகப்புத்தகக் காலவரிசையும்

அல்லோலப்படுவது உறுதி!

டுவிட்டர் டுவீட்ஸ், வாட்ஸ்அப் வரிகளும்

காதல் சுனாமியால்

சீரழியப் போகிறதே!

திரவியம் தேடிப் போன தமிழர்கள் ,

அண்டை நாட்டிலும் அண்டார்டிக்காவிலும்

தொடு பேசியை தொட்டு பேசினார்களா?

தொலை தூரக் காதல்

எப்படி சாத்தியமாயிற்று?

இக்காலமதில் கருவிகள் பல உண்டு…

இம்சைகளும் பெருக்கலே!

காதலில் விழுந்து தொலைத்தால்,

உள்நாடென்ன வெளிநாடென்ன…

கிட்ட இருந்தாலும் அவஸ்தை

எட்டப் போனாலும் இம்சை…

தொடு பேசி வாழ்க! காதல் வளர்க!

~~~ ஆர்த்தி ரவி

காதல் புதைகுழி

கிள்ளித் தரவா அள்ளி வைக்கவா,

கன்னக்குழியில் புதைந்து போகவா?

கன்னக்குழி என்று நம்பி வீழ்ந்தது புதைகுழியிலா?

உன்னில் உன்னில் காதலாகி,

உருகி உருகி உயிர் கரைந்து,

மீளா ஒரு வழிப் பயணம்

உனது விழிப் பார்வை!

காலம் கடந்து வந்தது சிந்தனை…

நான் வீழ்ந்து போனது

காதல் புதைகுழியே தான்!

~~~ ஆர்த்தி ரவி

அனுபவங்கள்

சோதித்துப் பார்க்கிறாய்

சகித்துக் கொள்கிறேன்

அறியத் தருகிறாய்

ஒவ்வொன்றையும் கடந்து வருகிறேன்

அனுபவங்கள் புதியவை

எதிர்பார்க்கவில்லை.. எதிர்க்கவுமில்லை

பசி பட்டினி தாகம்…

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்?

செய்து கொள், காத்திருக்கிறேன்!

~~~ ஆர்த்தி ரவி

அம்மா

அம்மா என்ற ஒரு சொல்லில்
அகிலமும் அடங்கிவிடுகிறது..
உறவுக்கும் உணர்வுக்கும் அர்த்தம் கற்பிக்கிறவள்
‘அன்பு’ எனும் சொல்லுக்கு அர்த்தமாகிறவள்..

முதல் சொந்தம்
முதல் பந்தம்
முதல் முத்தம்
முதல் கண்ணீர்
முதல் சொல்
முதல் உணர்வு
முதல் துடிப்பு என
அனைத்திற்கும் முதலாமவள்
அம்மா!

நீ யார்?

நிந்தித்தேன் உனை மட்டுமே
சிந்திக்கவில்லை உனை கடந்து…

இதயத்திற்கு இதம் தருகிறாய்
நினைவுருவில்…
இதயத்தைப் பதம் பார்க்கிறாய்
நிகழ்வுருவில்…
இதில் நீ யார் நிசத்தில்?

புரியாத புதிராய்
மனதில் சதிராடுகிறாய்…
இருப்பினும் இதயத்தில்
வரித்து வைத்த காதலுக்கு
வடிவமாய் உன் உருவமே…

இப்படிக்கு,
என்றும் உனை நிந்தித்திருக்கும் காதல் நெஞ்சம்!

மொழி

நான் யாருடனும் பேசுவதில்லை…
இதயம் ஊமையாகிப் போனபிறகு
இதழ்களுக்கு மொழி எதற்கு?
மௌனமாகவே இருந்து கொள்ளட்டும்..

நம்பிக்கை

நட்பின் முதல் வித்து நம்பிக்கை

சிந்தனையின்றி சந்தேகம் கொள்ளும் 

நட்பதன் ஆழமென்ன அரிதாரமே

மணல் படுக்கை பொய்மை

பிரிதல்

நீயே வந்து நட்பாகினாய்
நீயே விலக்கியும் வைத்தாய்
காரணங்களைச் சொல்லவில்லை
உண்மை குணத்தையும் மதிக்கவில்லை…

மீண்டும் நட்பை நல்கினாய்
உன் காரணங்களுடன்..
யோசித்தேன்… ஏற்புடையதாயில்லை
இணைத்துக் கொள்ளவில்லை…

மாதங்கள் கடந்தும் கேட்டாய்
மாறாத நட்புள்ளத்தால் இணைத்தேன்…
ஒரு முறை உடைந்தது ஒட்டாது
என்பது கண்ணாடி நட்பிற்கும் பொருத்தம்…

நல்நட்பு புரிந்துணர்வில் நிலைக்கிறது…
என் நட்புக்கள் என்னுடன் பயணிப்பார்கள்…
மன உளைச்சல்கள் தரும் நட்பை
விலக்கியதற்காக வருந்துகிறேன்…