5 ஸ்டார்

5 ஸ்டார்

ஆர்த்தி ரவியின் சிறுகதை 2

எதிர் எதிரே அமர்ந்திருந்த இருவரின் முகங்களிலும் அத்தனை உணர்வு கலவைகள்.

அவன் எரிமலையின் கனலை அடக்கியபடி அவளைக் கூர்மையாகப் பார்த்து “பேசுவதற்கு முன்னால் என்னிடம் கேட்க மாட்டியா?” என்றான் கடுமையாக.

அவளோ உன் கோபம் என்னைப் பாதிக்காது என்கிற வகையில் “ஏன் கேட்கணும்?” என்றாள்.

சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து “இனி, எதற்கும் என்னை எதிர்பார்க்காதே” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து சென்றான்.

இந்தத் திவாகர் ஏன் இவ்வளவு உரிமை எடுத்துக் கொள்கிறான் என்று கவிதாவிற்குப் புரியவேயில்லை. இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்கின்றனர். இந்தச் சில மாதங்களாகத் தான் திவாகருடன் நல்ல பழக்கம். அவன் இவளுடன் ஒரே பிரிவில் பணியாற்றத் தொடங்கியதில் இருந்து இருவருக்குமிடையே நல்ல நட்பு மலரத் தொடங்கி இருந்தது.

இவளுக்குச் சில உதவிகளை அவ்வப்போது செய்து கொடுத்திருக்கிறான். நல்ல குணமுடையவன். எப்போதும் அக்கறையாக எதையாவது பேசுவான் என்றாலும், இப்படி நேரிடையாக இவளின் விசயத்தில் தலையிட்டதில்லை.

இன்று என்னாச்சு இவனுக்கு? கவிதாவிற்கு அவனின் கோபம் குழப்பம் தந்தாலும், அவனிடம் ஒன்றும் காட்டிக் கொள்ளவில்லை. தன் வேலையில் மூழ்கினாள். மாலையில் இவள் வீட்டிற்குக் கிளம்பும் போது கூடத் திவாகர் உம்மென்று தான் இருந்தான்.

திவாகர் சொன்னால் எதாவது காரணம் இருக்கும். இவ்வளவு கோபப்படுகிறான் என்றால்…யோசித்தாள். அதனால், காலையில் அலுவலகத்தில் பேசி வைத்தது போல் உடன் பணி புரியும் பிரபாகரனின் திருமண வரவேற்பில் கவிதா கலந்து கொள்ளவில்லை. விரைவாகவே சென்று, மகளை மாலை காப்பகத்திலிருந்து அழைத்துக்கொண்டாள்.

“தேவி… தேவிம்மா… இந்தச் சின்னக் குட்டி எங்கிட்டுப் போனா. சொல்லாம வீட்ட விட்டு வெளியே போகாதே. ஸ்கூல விட்டு வந்தா வீடு திண்ணைன்னு இருக்கவ. தேவிம்மா…”

கவிதா தேவியைத் தேடினாள். அது சின்ன வீடு தான். எங்கே போய்விட முடியும்? முன் முற்றத்திலும் தேவியைக் காணவில்லை. வீட்டுக்குள்ளேயும் அவளில்லை. அதற்குள் அடுப்பில் தேவிக்காகச் சுட்டுக் கொண்டிருந்த தோசையின் கறுகல் வாசனை வரவே, அவசரமாக அடுப்பை அணைக்கச் சென்றாள் கவிதா.

அந்த நேரம் பின் கட்டிலிருந்து அரவம் கேட்டதும், கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். எலுமிச்சை மரத்தடியில் குனிந்து நின்று கொண்டிருந்தாள் முல்லைதேவி. நான்கு வயது சிறுமி.

தந்தையை அறியாதவள். அடையாளம் காட்ட வேண்டிய அன்னை, ஏனோ மகளிடம் அவள் தந்தையைப் பற்றிக் கூறியிருக்கவில்லை. கவிதாவிற்குத் தேவி, தேவிக்குக் கவிதா என அவர்களின் உலகம் மிகச் சிறுத்திருந்தது. இப்போது தான் நண்பனாகத் திவாகரும் அவர்களின் உலகத்தில் எட்டு வைத்திருந்தான். கவிதா சொந்த ஊரை விட்டு வந்து ஐந்தாவது வருடம் நிகழ்கிறது.

“அங்கனக்குள்ள என்னடி பண்ற? அம்மா உன்னைக் காணமேன்னு இங்கிட்டு தேடிகிட்டு இருக்கேன்.”

புடவையை இழுத்துச் சொருகிக்கொண்டே பின் வாசல் படிக்கட்டில் இறங்கி, மகளின் அருகில் சென்றாள் கவிதா. அவளோ ஒரு குச்சியால் மண்ணை நோண்டிக் கொண்டிருந்தாள்.

“குட்டி, என்னத்தைத் தேடுறடி. ஸ்கூல் விட்டு வந்ததும் அம்மா பசிக்குதுன்னு தட்டப் போட்டு சாப்பிட உக்காருவ. என்னடி ஆச்சு இன்னக்கி?”

“ம்மா.. அன்னக்கி ஒரு நாளு இங்கனக்குள்ள 5 ஸ்டார் மிட்டாயப் பொதச்சு வச்சேனா. அதத்தேன் பார்த்துக்கிட்டு இருக்கேன்மா.”

“ஏன் குட்டி மிட்டாயச் சாப்பிடாம மண்ணுக்குள்ள புதைச்சு வச்ச?”

அவளின் குரலில் ஒரு வித நடுக்கம். மனதில் படபடப்பு. ஆவலாக மகளின் முகத்தை ஏறிட்டாள். தான் சிறு வயதில் செய்த செயலை இப்பம் மகள் செய்திருக்கிறாளே! என்ன, ஒரே ஒரு வித்தியாசம், இவள் ஆரஞ்சு மிட்டாயைப் புதைத்து வைத்திருந்தாள். மகளோ 5 ஸ்டார் சாக்லேட்டை புதைத்து வைத்துவிட்டு இப்ப மண்ணைக் கிளறிக் கொண்டிருக்கிறாள்.

“போம்மா.. உனக்கு இது கூடத் தெரியல. மண்ணுக்குள்ள பொதச்சாத்தேன் சாக்லேட்டு மரம் வளரும். தினமும் சாக்லேட்டுத் திங்கலாம். இல்லன்னா நீ எப்ப வாங்கித் தர்றியோ அப்பத்தான சாப்புட முடியும்”

தலையை ஆட்டியாட்டிப் பேசும் மகளை விழி விரிய இமைக்காமல் கவிதா பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ம்மா, எங்கிளாஸ்ல புதுசா வந்திர்கான்ல கிசோரு. அவனும் நானும் ஒரே நாள்ல தாம்மா சாக்லேட்ட மண்ணுக்குள்ள பொதச்சோம். அவனுக்குச் சாக்லேட்டு செடி மொளச்சிருக்குன்னு இன்னக்கி சொன்னான்மா. எனக்கு மட்டும் இன்னும் ஏன்மா மொளைக்கல?”

மகள் பேசப் பேச, கவிதாவின் நெஞ்சில் பல உணர்வுகள் வந்து மோதின.

‘அவனும் நானும் இப்படித் தானே அறிமுகம் ஆனோம். மிட்டாய் மரமா முளைக்காது என்று தெரிந்திருக்கும் வயது அவனுக்கு. ஆனாலும், எனக்காக, நான் மிட்டாயப் புதைச்சு வைச்சு தண்ணி ஊத்தும் போது அவனும் கூடச் சேர்ந்து ஊத்தினான். செடி வரலன்னு நான் அழும் போது என் கண்ணீரைத் துடைத்து அணைத்துக் கொண்டான். அப்போது தொடங்கியது தானே எங்கள் தோழமை.

அப்பா அம்மா பஸ்ல அடிபட்டுக் கிடந்த போதும், சிகிச்சை பலன் அளிக்காது போய்ச் சேர்ந்த போதும், அண்டிப் பொழைக்க வந்த ஒன்னுவிட்ட அத்தைக்காரி கொடுமைப்படுத்தி வதைத்த போதும்…

பாடம் புரியாமல் முழித்துத் திணறி நின்ற போதும்; பருவ மாற்றங்களை அறியாமல் மருண்ட போதும்; பூப்பெய்திய நேரம் புதிய வலிகளைத் தாங்க இயலாது அழுத போதும்; பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மகிழ்ந்த போதும்; நல்ல கல்லூரியில் படிக்க இடம் கிடைத்த போதும்…

இப்படி எல்லாவற்றுக்கும் உடன் இருந்து ஆறுதல் தந்து, அரவணைத்து, கற்றுத் தந்து, அறிவுருத்தி, தோள் சாய்த்து, சிரித்து, மகிழ்ந்தானே! வாழ்க்கையில் என்னுடன் பயணித்தது அவன் ஒருவன் மட்டுமே. அவனில்லாமல் நானேது?’

வாழ்வின் மிக முக்கிய நிகழ்வு. இருவருக்கும் பொக்கிஷமாகி இருக்க வேண்டிய மகளின் ஜனனத்திற்குப் பிறகு, இவள் தான் அவனைப் பிரிந்து தொலைவில் வந்துவிட்டாளே! குற்ற உணர்வினால் விலகினாலும், இந்தத் தவிப்பு, அவனைப் பார்க்க வேண்டிய ஏக்கம் அடங்கி விடத் தான் இல்லை!

மகளை ஒருவாறு சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து வந்து, சுத்தப்படுத்திவிட்டு உணவளித்தாள். முல்லைதேவி பாடப் புத்தகங்களுடன் அமர்ந்துவிட, கவிதா அவனின் நினைவுகளுடன் ஐக்கியமானாள்.

அவன்… முகில்வேந்தன். ஒரு தனிமையான சூழல், கார்கால மாலை நேரம், மனம் வெதும்பி தவித்தவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு இருக்க… எப்படி நிகழ்ந்தது? எந்த நொடியில் இருவரும் ஒருவரில் ஒருவர் மூழ்கினர்? இணைந்து இளகி, கனிந்து கூடிக் களித்து… ஒரே முறை தவறியது தோழனுடனல்லவா? அவன் முகம் காண வெட்கி, தைரியமற்றுத் தனியாக ஓடி ஒளிந்து, ஏன்?

சகோதரத்தில் தான் காதல் நுழையாது. நுழையவும் கூடாது. நட்பில் நேசம் பிறத்தல் தப்பில்லை. தன்னை உரிமையுடன் தோள் சாய்த்துக் கொண்டாடும் முகிழ்வேந்தன் கணவன் ஆகினால், அதில் தவறென்ன இருக்கிறது? காலத்தால் உணர்ந்து கொண்டாள். மகளுடனான தனிமை வாழ்வு அவளைப் பக்குவப்படுத்தியிருக்க, இந்நொடியில் பூவையின் நெஞ்சம் கணவனாக அவனைத் தேடியது.

மிகச் சரியாக அதே விநாடியில் முன் வாசற்கதவு தட்டப்பட்டது. அதனைத் திறந்தவளின் விழிகள் விரிய அப்படியே உறைந்து நின்றிருந்தாள். திடமான உருவத்தில், தீர்க்கமான முடிவுடன் வந்திருக்கும் முகில்வேந்தன், ஒரு முழு நிமிடம் அவளையே ஊடுருவிப் பார்த்தான். பின்னர், சடாரென உள் நோக்கிப் போய், மகளை வாரி அணைத்துக் கொண்டு உச்சி முகர்ந்தான். தவறவிட்ட பொன்னான காலங்களை எண்ணி விழியோரம் கசிய நின்றிருந்தான்.

“அப்பாடா குட்டிம்மா.”

“அப்பா! என் அப்பாவாமா?” தன்னை அறிமுகமற்ற பார்வையால் பார்த்து வைத்த மகளிடம் கூறிக்கொண்டிருந்த கவிதாவை, கன்னம் பழுக்க அறைந்திருப்பான். மகளை எண்ணி தணிந்தான். “நான் என்னடி பாவம் செஞ்சேன்? பிரிச்சு வச்சிட்டியே!” குற்றம் சாட்டும் விழிகளைக் காண முடியாமல் தலை குனிந்து கண்ணீர் வடிப்பவளை, ஆதுரமாகத் தாங்கிக் கொண்டான். மெதுவான குரலில் அன்றிருந்த மனநிலையைக் கவிதா எடுத்துரைத்தாள்.

“முட்டாள்! உன்னைத் தங்கச்சின்னு நான் என்னைக்காவது சொல்லி இருக்கேனாடி? சின்ன வயசுலயே சொன்னதில்லை. வளர வளரத் தானே நமக்கு நம்ம உணர்வுகள் புரிபடும்! என் வாயால நான் காதலை சொல்லலைனாலும், என்கிட்ட நீ ஒரு வாட்டிக் கூட உணரலையா? போடி! நம்ம நேசம் நட்பையும் தாண்டிப் போய்க் காதலாகாம இருந்திருந்தா, நம்மக் கூடல் சாத்தியமாகி இருக்காது. கல்யாணம் ஆகாமல் அப்படி நடந்திருக்கக் கூடாது. தப்புத்தேன். ஆனால், நம்ம தப்பானவங்க இல்லை. நம்ம உறவுமுறையும் சரிதேன். புரிஞ்சுதா? அஞ்சு வருசம்! எப்படியெல்லாம் தவிச்சுப் போய் உன்னைத் தேடி அலைஞ்சேன் தெரியுமாடி? என் தோஸ்த்கிட்டப் பேசியிருக்கலைனா…”

“உள்ளே வரலாமா?” பரிச்சயமான குரலில் நிமிர்ந்து பார்த்தாள் கவிதா. திவாகர் ஒரு சிறுவனுடன் நின்றிருந்தான். “கிசோரு!” எனக் கூவிய முல்லைதேவி, “அப்பா என் ப்ரெண்டுப்பா.” என்று சொல்லி கழுத்தை கட்டிக் கொள்ள, மகளின் அழைப்பில் உருகி நின்றிருந்தான் முகில்வேந்தன்.

“போகலாமா வேந்தா? என்ன கவிதா மேடம், கிசோர் என் மகன் தான். அப்படியே நின்றால் எப்படி? கிளம்பி வாங்க. நேரமாச்சு.”

இப்போ தெளிவாகியது எல்லாம். திவாகரின் வித்தியாசமான கோபம் ஏனென்றும், மகளின் 5 ஸ்டார் தொடர்புக்கான காரணமும். மகளை ஏந்தி நடந்து கொண்டிருக்கும் முகிலின் விரல் கோர்த்து இணைந்து கொண்டாள் கவிதா.

மறுநாள் திருமதி முகில்வேந்தனாக நண்பனின் அருகில் சந்தோசமாக நின்றிருந்த கவிதாவை நோக்கி புருவம் உயர்த்தி அழகாகப் புன்னகைத்தான் திவாகர்.

(சுபம்)

Advertisements

என் விழியில் உன் கனவு

என் விழியில் உன் கனவு

எதிர் எதிரே அமர்ந்திருந்த இருவரின் முகங்களிலும் அத்தனை உணர்வு கலவைகள்.

அவன் எரிமலையின் கனலை அடக்கியபடி அவளைக் கூர்மையாகப் பார்த்து “பேசுவதற்கு முன்னால் என்னிடம் கேட்க மாட்டியா?” என்றான் கடுமையாக.

அவளோ உன் கோபம் என்னைப் பாதிக்காது என்கிற வகையில் “ஏன் கேட்கணும்?” என்றாள்.

சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து, “இனி, எதற்கும் என்னை எதிர்பார்க்காதே” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து சென்றான்.

“போடா! போ போ. எதிர்பார்க்காதேவாம்! தேவையில்லை எதுவும். நான் அவங்க கிட்ட பேசினது எல்லாம் உனக்காகத் தான்.”

கிருஷ்ணலேகா தன் தலை சாய்த்து, விலகிப் போகும் பிரசன்னாவையே பார்த்துக்கொண்டு சில நொடிகள் நின்றாள்.

நட்பு என்றால் கிருஷ்ணலேகா எனப் பொருள் கொள்ளலாம். அத்தனை ஆழம்! எல்லோரிடமும் வெகு சுலபமாகப் பழகக் கூடியவள் அல்ல. ஆனால், அவளுக்கு ஒருவரை பிடித்துப் போனால், தன் நொடி நேரங்களில் கூட நட்பை சுவாசம் எனக் கொண்டிருப்பவள்.

கிருஷ்ணலேகா, பிரசன்னா இருவரும் ஒரே பள்ளியில் பயில்பவர்கள். அருகருகே வசிப்பவர்களின் பழக்கம் வீடு வரை வேரூன்றியது.

பிரசன்னாவுடன் லேகா கொண்டுள்ள நெடு நாளைய நட்பு, இன்று அவளைத் துணிச்சலாக ஒரு செயலை செய்யத் தூண்டியிருக்கிறது. எப்படி வந்தது அந்தத் தைரியம்? அவள் வயதையும் மீறிய பேச்சுத்தான். அதுவும் பெரியவர்களிடம்! அதனால் தான் பிரசன்னாவிற்கு ரொம்பக் கோபம்.

“ஏன் அங்கிள் பிரசன்னவை டெல்லிக்குப் போக வேண்டாம்ன்னு சொல்றீங்க? அவன் டேலண்ட்ஸ் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? எப்பப் பாரு வேலை வேலைன்னு சுத்திட்டு இருக்கீங்க. அவன் மேல் கொஞ்சமாவது அக்கறை இருக்கா உங்களுக்கு?

ஆன்ட்டிக்கு அவனைப் படி படின்னு ஒரே டார்ச்சர் பண்றது தான் வேலை. டாக்டர், இன்ஜினியரிங் இப்படிப் படிக்கணும், அதானே உங்களுக்கெல்லாம்? உங்க மகன் படிப்பைத் தாண்டியும் எதிலெல்லாம் ஆர்வம் வச்சு திறமையை வளர்த்திருக்கிறான். அதையெல்லாம் நீங்க யோசிக்க மாட்டேங்கறீங்க.”

“இல்லம்மா லேகா…”, பிரச்சன்னாவின்அப்பா பேச ஆரம்பிக்க,

“ப்ளஸ் டூல இருக்கும் போது…”, அதே நேரம் அவனின் அம்மாவும் ஏதோ சொல்ல வர, எங்கே இவள் பேச விட்டால் தானே?

“ப்ளஸ் டூ படிக்கிறான்னு காரணம் சொல்லி சப்பைக்கட்டு கட்டாதீங்க ரெண்டு பேரும். ஏன் இப்போ என் பேரண்ட்ஸ் என்னை அனுப்பி வைக்க ரெடியா இருக்காங்க தானே? நானும் பிரசன்னா க்ளாஸ்ல தான் படிக்கிறேன். அவன் நல்லா தானே படிக்கிறான். அப்புறம் என்ன ஆன்ட்டி? அம்மா, அப்பாவா படிப்பைத் தாண்டியும் அவனுக்குக் கனவு இருக்குங்கிறதையாவது தெரிஞ்சு வச்சிருக்கீங்களா? ம்கூம்… இல்லை தானே!”

அந்நேரம் பிரசன்னாவின் வேதனை மட்டுமே அவளை ஆக்கிரமித்து இப்படிப் பேச வைத்திருந்தது.

பிரசன்னாவின் படிப்பு வெறும் பாடப் புத்தகங்கள் மட்டுமல்ல. அவற்றைத் தாண்டி கலையிலும் விளையாட்டிலும் தேர்ந்தவன். வரைவதில் மிகுந்த ஆர்வமானவன். எத்தகைய சூழலையும் எளிதாக வடித்து விடும் திறன் அவனுக்குண்டு. பேப்பர், ஃபேப்ரிக், கேன்வாஸ் என வகை வகையாகத் தன் கைவண்ணத்தில் வரைந்து, வண்ணங்களுடன் ஜாலம் செய்து வைத்திருக்கிறான்.

சமீபத்தில் பள்ளியில், சுவர் சித்திரமாக ம்யூரல் ஆர்ட் (Mural art) ஒன்றை வரைந்து அனைவரின் பாராட்டைப் பெற்ற பிரசன்னாவைக் கண்டு லேகாவிற்குப் பெருமிதம். லேகாவிற்கும் இக்கலையில் ஆர்வம் உண்டு. நன்றாக வரைவாள் தான். ஆனாலும் அவனின் திறமை அலாதியானது.

பன்னிரெண்டாம் வகுப்பின் தொடக்கத்தில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அரிதாக ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. தலைநகரத்தில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான சித்திரம் வரைதல் போட்டி!

இருவரும் சில வாரங்களுக்கு முன், செய்தித்தாளில் வந்திருந்த போட்டிக்கான விண்ணப்பித்தல் அழைப்பிற்கு ஆசையாக விண்ணப்பம் அனுப்பி வைத்திருக்க, கலந்து கொள்வதற்கான அழைப்பும் வந்துவிட்டது.

இருவருக்கும் பள்ளியில் புதுத் தில்லி செல்ல அனுமதி கிடைத்துவிட்டது. ஆனால், அந்த நாட்களில் சொல்லித் தரும் பாடங்கள் இவர்கள் பொறுப்பு. இவர்கள் திரும்பி வந்ததும் காலாண்டுத் தேர்வுகள் தொடங்க இருப்பதால், இவர்களும் அதே தேதியில் எழுத வேண்டும்.

அதனால் தான் பிரசன்னாவின் பெற்றோர், “வேண்டாம்! அடுத்த வருடம் கல்லூரியில் சேர்ந்ததும் போய்க் கொள்!” என மகனிடம் சொல்லிவிட்டனர்.

அடுத்த வருடம் இப்படித் தங்கள் விண்ணப்பம் தேர்ந்தெடுக்கப்படுமா? கிடைத்த வாய்ப்பை விட வேண்டாமே! தன்னை விடப் பிரசன்னாஎவ்வளவு ஆவலாகக் காத்திருந்தான்? அவனின் கனவு இப்படியொரு பெரிய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பது தானே? எப்படித் தவற விடுவதாம்?

அவனின் பெற்றோர்களிடம் சென்றவள் பொங்கிவிட்டாள்!

அதான் பிரசன்னா அப்படிக் கோபத்தை காட்டியது.

இரண்டாம் நாள் இரவு, பிரசன்னா லேகாவின் வீட்டு தொலைபேசிக்கு அழைத்தான்.

“டீ கிருஷ்! அம்மா அப்பா ஓகே சொல்லிட்டாங்கடீ! அவங்க ரெண்டு பேரும் நம்ம கூட வர்றாங்களாம். தாங்ஸ் டீ! நான் ரொம்பச் சந்தோசமா இருக்கேன்!”

“ஹே! சூப்பர் மச்சி! அப்போ எனக்கு நாளைக்கு ஒரு கிட்கேட் சாக்லேட் பார் வாங்கித் தரணும். சரியா?”

“முடியாது போடி! என்கிட்ட இனி எதையும் எதிர்பார்க்காதேன்னு சொன்னேனில்ல? அதெப்படிடி அப்படிப் பொங்கி பொங்கி பொங்கல் வச்ச? அப்பா அம்மா பெரியவங்கன்னு யோசிச்சுக் கொஞ்சம் நிதானமா எடுத்து சொல்லியிருக்கலாம்ல…”

“சாரிடா! நீ ரொம்ப ஃபீல் பண்ணினேல்ல, அதான் அப்படிக் கோபம் வந்துருச்சு. நான் வந்து அங்கிள், ஆன்ட்டி கிட்ட மன்னிப்பு கேட்கிறேன்.”

“வேண்டாம் போடி!” இப்படி முறுக்கிக் கொண்டவன் தான் மறுநாள் காலையில், முகம் கொள்ளா புன்னகையோடு இரண்டு கிட்கேட் சாக்லேட்டுடன் போய்க் கிருஷ்ணலேகா முன் நின்றான்.

நட்பின் ஆழம் அளவுகோல் கொண்டு அறிவதல்ல. செயல்களும் துடிப்பும் சொல்லும் தோழமைகளின் பிரியங்களை!

இருவர் குடும்பங்களும் ஒன்றாகவே புதுத் தில்லி சென்றனர். பயண முடிவில் கிருஷ்ணலேகா ஆர்ப்பரித்துக் குதித்துக் கொண்டிருந்தாள். அவள் ஆறுதல் பரிசைக் கூட வென்றிருக்கவில்லை. முதல் சுற்றின் முடிவிலேயே வெளியே வந்திருந்தாள்.

அவளின் இத்தனை மகிழ்ச்சியும் ஆர்ப்பாட்டமும் பிரசன்னாவிற்காகவே! தேசிய அளவில் இரண்டாம் பரிசை வென்று விட்டான். அவனின் பெற்றோர்கள் நீர்த்திரையிட, லேகாவை அணைத்து நன்றி சொல்ல,

“ஹலோ, ஹலோ! நான் தானேப்பா வெற்றி பெற்று வந்திருக்கேன். அவளுக்கு எதுக்கு ஹக் தர்றீங்க?”

வேண்டும் என்றே இடையில் புகுந்தான் பிரசன்னா. அங்கே கனவொன்று நிஜமானதால் பெரும் மகிழ்ச்சி அலை பரவியது.

~~~~~~~~

கண்மூடிக்காதல் (சிறுகதை 1)

வணக்கம் ப்ரண்ட்ஸ்,

என் முதல் சிறுகதையை ‘கண்மூடிக்காதல்’ என்ற தலைப்பில் பதித்துள்ளேன். வாசித்துப் பார்த்துவிட்டு கதையில் இருக்கும் நிறைகுறைகளைச் சொல்லுங்கள்.

நன்றி!

அன்புடன்,

ஆர்த்தி ரவி

 

கண்மூடிக்காதல்

அக்கம் பக்கம் எல்லாம் திரண்டு வந்திருந்தனர்.

அனைவரும் சோகம் அப்பிய முகங்களுடன் தங்கள் வீட்டுத் துக்கத்தை அனுசரிப்பது போல நின்றிருந்தனர். சொந்தங்கள் மட்டும் இன்னும் வந்த பாடில்லை. தாக்கல் அவர்களுக்குப் போயிருக்கும்.

அழுகையும் ஓலமும் பெரிதாகிக் கொண்டிருக்க அங்கிருந்த ஆண்களில் சிலர் பெண்கள் கூட்டத்தை அடக்க முற்பட்டனர்.

ஓரிருவர் சற்று அதட்டலான குரலில், “போனவப் போய்ச் சேர்ந்தாச்சு, ஒப்பாரி வச்சாப் போன உசுரு தான் வந்திரும்மா. வேலை என்ன கிடக்குன்னு பார்த்துப் பண்ணுங்காத்தா”.

பெரியர் ஒருவர், “ஒப்பாரியைக் கேட்டு அந்தச் சின்னப் புள்ள இன்னும் பெருசா அழுகுது பாரு. நா வரளப் போகுது. காபித்தண்ணிக் கொடுத்து செத்த என்னன்னுப் பாராத்தா.”

சடலத்தின் அருகே அமர்ந்து வீரிட்டு அழுது கொண்டிருந்த இரண்டுங்கெட்டான் வயதில் இருந்த துளசியைப் பார்த்துப் பரிதாபப்பட்டு ஆச்சியை ஏவினார்.

“தம்பி கோவாலு, அவிக உறவுக்காரங்களுக்குத் தாக்கல் போயிருச்சா. இருவது மைல்கல்லு தூரம் கூட இருக்காது, ஒத்தச்சொந்தம் கூட வரலியேப்பா. உசிரோட இருந்தப்பத் தான் எட்டிப் பார்க்கல. சாவுல கூடக் கலந்துக்க வர அவிகளுக்கு மனசில்லையே.”

ஒருவர் அங்கலாய்ப்பை வெளியிட, மற்றொருவர்,

“சொந்தம் வருதோ போகுதோ, நாம ஒன்னுமன்னா பளகினவிக இருக்கையில எந்தக் குறையும் வைக்காம நடக்க வேண்டியத பார்ப்போம்வே”

“அக்கா கையால எத்தனை வாட்டி சாப்பிட்டு இருக்கோம்லே, சொந்தமில்லாம நாதியத்தப் பொணமா போகவிட்டிருவோமா? ஏலே, சின்னராசு… மூர்த்தி… திருநாவு… பாண்டி… அஜய்யி வாங்கலே. ஆக வேண்டியதப் பார்ப்போம்” இளவட்டங்கள் ஆளுக்கு ஒரு வேலையை எடுத்துச் செய்யத் துவங்கினர்.

‘அன்னம் மெஸ்’ அன்னக்கொடியின் கையால் சில வருடங்கள் சாப்பிட்ட நன்றி அங்கு வெளிப்பட்டது. காசு கொடுத்துத்தான் உண்டனர்.

ஆனால், அன்போடு ருசியான உணவைப் பறிமாறி தங்கள் வயிற்றுப் பசியைப் போக்கிய அன்னக்கொடி அவர்களுக்குச் சகோதரியாகத் தெரிந்தாள்.

“நல்ல மனசுக்காரி. இம்முட்டு கச்டத்தில கூடக் கௌரதயா வாழ்ந்தவப்பா அன்னம். இப்படி அவசரமா போகணுமா? கிழடுகட்டைங்க நாங்களே திம்முனு இருக்க, சின்ன வயசுல இப்படிப் புள்ளங்கள தவிக்கவிட்டுப் போய்ச் சேரணும்னு விதிச்சிருக்கு.” என்று ஒரு பெருசு அங்கலாய்க்க..

“அப்பு செல்வகுமாரு, உங்க அப்பன்காரனுக்கு ஒரு போனு போட்டு சொல்லீரனும்ய்யா. செத்த இப்படி வாய்யா” பக்கத்து வீட்டு ஆச்சி அவனை அழைத்தாள்.

அதுவரை தன் தாயை வெறித்தபடி தங்கையைத் தோளில் சாய்த்து பிடித்திருந்தவன் உடம்பு இறுகியது. அப்பன்காரனாம்… உடன் இருந்த போதும் பிரயோசனமாக இல்லை… பிரித்துத் தூக்கி எரிந்து வேதனை தந்தான்… இப்போ செத்தவன் மொத்தமாக அம்மாவையும் எடுத்துக்கிட்டுப் போய்டானே…

தன் அம்மாவை அறிந்தவனாய் ஒரு மாதம் முன்பு அவனை வந்தடைந்த அப்பாவின் அகால மரணச் செய்தியை மறைத்திருந்தான் செல்வக்குமார்.

உறவை அறுத்துவிட்டு ஒதுங்கி நின்னு வேடிக்கைப் பார்த்த சொந்தங்கள் எந்த முகத்தோடு அருகில் வருவாங்க என்ற நினைப்பில் இவனும் பீடை செத்தொழிந்தாச்சு இனி நிம்மதி என நினைத்து நடமாட, அப்படி விட முடியுமா என விதி எள்ளி நகையாடியது.

ஒரு மாதம் கழித்து நேற்று யாரோ ஊரிலிருந்து வந்த சொந்தக்காரர் ஒருவர் உழவர் சந்தையில் அம்மாவை அடையாளம் கண்டு கணவனின் சாவில் கலந்து கொள்ள வரவில்லை என ஏசி, அந்த சீர்கெட்ட அப்பனின் மரணச்செய்தியை போட்டுடைக்க, இதோ காலையில் பிணமாகக் கிடக்கிறாள்.

செல்வக்குமார் எனப் பெயரில் மட்டும் செல்வத்தைப் பார்த்திருந்த அந்த இளங்காளைக்குத் தன் அம்மா அந்தத் தரங்கெட்ட மனிதன் மேல் வைத்திருந்த கண்மூடித்தனமான காதலை எண்ணி எரிச்சலாய் வரும்.

“ஏம்மா, ஊரு ஜனமெல்லாம் ஒன்னு கூடி சொந்தபந்தம் தாலி எடுத்துக் கொடுத்து கல்யாணங்கட்டி வந்தவ நீ! ஒன்ன அந்த ஆளு மதிச்சான்னாமா. ஒரு நாளு ஒரு பொழுது அடிக்காம இருந்திருப்பான. எப்படித்தேன் அந்த ஆளு கூடக் குடும்பம் நடத்தினியோ?”

“நல்லாத்தேன் இருந்தாருய்யா” புன்னகையுடன் சொல்வாள் அன்னக்கொடி.

“என்னத்த நல்லா இருந்தாரு” கொதித்துப் போவான் செல்வக்குமார்.

“புருசங்காரனா ஒனக்கு என்ன செஞ்சு கிழிச்சான். ஓன்ட அன்பா இருந்தானா, ஒத்த பைசா சம்பாரிச்சுப் போட்டானா? பெத்த புள்ளெங்கன்னு எங்களத்தேன் பாசமா வளத்தானா?”

“அப்பாவ அவெ இவென்னு சொல்லாதய்யா செல்வம்”

“அடுத்தவள வச்சிருக்கவன் எல்லாம் எங்களுக்கு அப்பனில்லம்மா. கருமம்!”

“என்னிக்கு உன்ன கழுத்த புடுச்சு வெளியே தள்ளுனானோ அன்னக்கே நீ அவன தல முழுகி இருக்கணும். ஏம்மா, பக்கத்து வீட்டு ஆச்சி மட்டும் இல்லன்னா நம்ம கெதி என்னவாகி இருக்கும்? துளசி பாப்பாவ இடுப்புல வச்சிட்டு என் கையைப் புடுச்சு இந்த ஊருக்கு கூட்டியாந்தயே, அன்னக்கி அழுத பாரு அழுக நெனச்சிப் பார்த்தா இன்னும் இங்கன வலிக்குதும்மா.”

நெஞ்சைத் தொட்டுக் காண்பித்துக் கண் கலங்கும் அந்தப் பதின்நான்கு வயது மகனை மடி சாய்த்து ஆதுரமாகத் தலை கோதுவாள் அன்னக்கொடி.

அவள் மனதில் ஏக்கமும் நிராசையும் ஒருங்கே பொங்கும்.

ஆனால், புருசனை ஒரு வார்த்தை குறைவாகப் பேசி விட மாட்டாள்.

வருடங்கள் உருண்டோடியது.

கடுமையாக உழைத்து அன்னம் மெஸ் மூலம் கால் ஊன்றி ஓரளவு சேர்த்து வைத்தாள். மெஸ்ஸூம் அதோடு ஒரு சிறு வீடும் அவர்களுக்குச் சொந்தமானது.

ப்ளஸ் டூ முடித்த செல்வக்குமார் கல்லூரிக்கு விண்ணபித்துவிட்டுக் காத்திருந்த வேளை,துளசி எட்டாம் வகுப்பில் அடி வைக்கும் முன் வயதுக்கு வந்தாள்.

அன்னக்கொடி பூரித்துப் போய்ச் சடங்கு செய்தாலும் மனசுக்குள்ள ஓர் ஏமாற்றம், பதைப்பு இருந்தது.

செல்வக்குமாருக்கு துளசி மேல் ரொம்பப் பாசம். இப்போ கூடுதல் பொறுப்பாகிப் பார்த்துக் கொண்டான்.

என்ன மாற்றம் வந்தாலும் அவள் புருசன் மேல் வைத்தக் காதல் அன்னக்கொடிக்கு வடியவில்லை.

“அவரு பிரியப்பட்டுத்தேன் என்ன கல்யாணங்கட்டுனாரு. ஏம் போதாத நேரம், ஏதேதோ நடந்து போச்சு செல்வம். ஆனா, நா.. எம் பிரியம் அப்படியேத்தேன் இருக்கு. அவரு எங்கன இருந்தாலும் பிழச்சி சுகமா இருக்கட்டும்.”

“ஏம்மா இப்படி இருக்க? திருந்தவே இல்லமா நீ, ஒரு வாட்டி புருசனவிட்டுக் கொடுக்க மாட்டியே. அப்படி என்னம்மா அவெம் மேல உசுரு ஒனெக்கு? ஓங்காதலுக்கு அருகதை அத்தவெம்மா நாயிப்பய.”

இரவு மெஸ் சமையலுக்குக் காய்கறிகளை வெட்டியபடி புருசனைத் தாளித்துக் கொண்டிருந்த பதினெட்டு வயது மகனை ஒன்னும் மறுத்துப் பேசாமல் அமைதியாகி நின்றாள்.

“ஒம் மனசுக்கேத்த மாதிரி நல்ல அன்பானப் புருசன நீ கும்பிடுற அந்தக் கருமாரித் தாயீ கொடுத்திருக்கலாம்மா.”

வருத்தத்தோடு சொல்லும் மகனைப் பார்த்து அன்று கண் கலங்கினாள் அன்னக்கொடி.

அதன் பிறகு சீராகத் தான் எல்லாம் போனது.

செல்வக்குமாருக்குக் கல்லூரியில் அவன் விருப்பப்பாடமான வர்த்தகம் படிப்பதற்கு இடம் கிடைத்திருந்தது. அடுத்த வாரம் செல்ல வேண்டும்.

ஆனால்,

காலையில் கட்டையாகிக் கிடந்த அம்மாவைக் கண்டதிலிருந்து, கலங்கி நின்ற செல்வம், அம்மாவுக்கு பதிலாகத் தான் சந்தைக்கு நேத்துப் போயிருக்கக் கூடாதா எனப் பல முறை தவித்துப் போனான்.

தன் அம்மாவைப் பற்றி அவன் பயந்தது போல் நடந்துவிட்டதே!

அந்நேரம் எதற்கும் பிரயோசனமற்ற செத்துப்போன அவனைப் பெற்ற அந்த ஜந்து மேல் பொறாமை கூட வந்தது.

‘இதோ அம்மாவ தூக்கப் போறாங்க…’

தான் ஓர் ஆண்மகன் என்பதை மறந்து, அன்னக்கொடியின் கால் மேல் தலையைப் புதைத்து பெருங்குரலெடுத்து கதறி அழுதான்.

அதுவரை கதறிக் கொண்டிருந்த துளசி வந்து அண்ணனை ஆதரவாகப் பற்றி எழுப்பினாள்.

எல்லாம் முடிந்தது.

சாமி மாடத்தில் பெரிதாக்கி மாட்டப்பட்டிருந்த அன்னக்கொடி பிரேமிற்குள் இருந்து புன்னகைத்தாள்.

கண்மூடித்தனமாகத் தன் உதவாக்கரை பதி மேல் அவள் வைத்திருந்த பிரியத்தை எண்ணி பெருமூச்சு விட்ட செல்வம், கல்லூரியை மறந்து அன்னம் மெஸ் நோக்கி நடந்தான்.

துளசியைப் பாதுகாப்பாய் படிக்க வைத்து ஒரு நல்லவன் கையில் ஒப்படைப்பது தான் இவனின் குறிக்கோள்!

தன் கல்லூரிக் கனவை மறந்து தனக்காக பாடுபடும் அண்ணனின் நேசத்தில் நெகிழ்ந்தது துளசியின் நெஞ்சம்.

(முற்றும்)
~~~~~~~~~~~~~~~