தீராதது காதல் தீர்வானது

தீராதது…. காதல் தீர்வானது…

கதை பற்றி நான் ஏதும் விவரமாக சொல்லப் போவதில்லை. பலர் கதையை வாசித்திருப்பீர்கள். இன்னும் படிக்காதவர்கள் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

எந்த ஒரு கதையின் சாராம்சத்தையும் ஓரிரு வரிகளில் சொல்லி முடித்து விடலாம். ராமாயண காவியம் கூட விதிவிலக்கல்ல. ஆனால் ஓர் கதைக்குள் பயணிக்கும் அனுபவம். அது தான் மிகுந்த ரசனையானது.

ஒரு நல்ல கதை கற்பனை என்ற போதும் கதாசிரியரின் சிந்தனை தான் அடித்தளம். அவரின் கண்ணோட்டம், அனுபவம் கூடவே கற்றுத் தெளிந்த ஞானம் இவை எல்லாம் கதை முழு வடிவம் பெற காரணம்.

அதனாலேயே பல கதைகள் படிக்கும் போது அங்கு நமது எண்ணங்கள் அனுபவங்கள் எல்லாம் வடிக்கப்பட்டிருகின்றன என்றே தோன்றும். We tend to relate ourselves to the characters/ story /the vison.

ஆர்த்தியின் இக்கதையோடு பயணித்த எனது அனுபவங்களை மட்டும் இங்கு பகிர ஆசைப்படுகிறேன்.

கதையின் தலைப்பே எனக்குள் ஓர் ஆர்வத்தைத் தூண்டியது. காதல் தீர்வானது சரி ஆனால் தீராதது எது. அப்படி தீர்க்கவே முடியாமல் போனது எது. அந்த கேள்விக்கு மிக அழகாக கதையில் விடை கிடைத்து விட்டது.

எப்போதும் போல ஆர்த்தியின் எழுத்து ஆளுமையை மிக ரசித்தேன். அவரின் வர்ணனைகளின் மிகப் பெரிய ரசிகை. அது ஒரு இடத்தை வர்ணிப்பது ஆகட்டும். இல்லை கதாபத்திரங்களை வர்ணிப்பது ஆகட்டும். அவர்தம் உணர்வுகளை எடுத்துக் காட்டுவது ஆகட்டும். தமிழே அழகு. அந்த அழகிற்கும் அழகு சேர்க்கும் வண்ணம் இவரது சொல்லாடல்.

ஓர் தெளிந்த நீரோடையை போல தங்கு தடையின்றி கதை பயணிப்பது மேலும் சிறப்பு.

எந்த ஒரு குழந்தைக்கும் தாய் என்ற உறவு எவ்வளவு முக்கியமானது அந்த உறவில் விரிசல் மன அளவில் எத்தனை பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்று மிக அழுத்தமாக பதித்திருப்பது;

கணவனும் மனைவியும் பிரிவை நாடி தங்களுக்கென இன்னொரு வாழ்க்கையை அமைத்துக் கொண்ட பின் இடையே ஊசலாடும் பிள்ளையின் நிலை, அந்த நிலை கண்டு கொள்ளும் வேதனை;

அதே நேரம் கொடுமையான ஓர் வாழ்க்கையை ஒரு பெண் சகித்து கொண்டும் வாழ வேண்டாம். திருமணம் என்பது கட்டாய பந்தம் இல்லை இசைந்து வாழும் உறவு என்று ஆணித்தரமாக உணர்த்தியிருப்பது;

காதல் – சொல்லாமல் போனதால், நிறைவேறாமல் போனதால் அந்த காதல் உண்மை இல்லை என்று ஆகிவிடாது. காதல் கைகூடாத வலி அதன் தாக்கம் ஒரு புறம் எனில் காதலித்தவள் ஓர் உன்னத உறவினளாக ஆன பின்பு ஓர் குற்ற உணர்வின் அழுத்தம்… இதற்கு தீர்வு என்று வாழ்க்கையை முடித்துக் கொண்டது வேதனை. இதுவும் ஒரு பிணி. காலம் என்னும் மருந்தை ஏற்றால் காயங்கள் ஆறிப் போகும் என்று தெளிவு அவசியம்;

கதையில் என் பார்வையில் அழுத்தமாய் பதிந்தவை இவை.

எனக்கு பிடித்த கதாபாத்திரம் என்று ஒருவரைக் கூற வேண்டுமெனில் சைதன்யா தான். மறுமணம் செய்து கொள்ளும் பெண்ணிற்கு அந்த திருமணம் சவாலாகவே இருக்கும். அதிலும் ஏற்கனவே அன்னையாக இருக்கும் பெண் மண உறவை முறித்துக் கொண்டாலும் தாய் என்னும் பந்ததை தக்க வைத்துக் கொள்ள பாடு படும் போது மிக அனுசரிப்போடு கையாண்டு உணர்வுகளை புரிந்து கொண்டு துணையாக ஓர் ஆண் இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இன்றைய ஓர் காலகட்டத்தில் இந்த மனோபாவம் ஆண்களுக்கு இருப்பது முக்கியம்.

நன்றி ஆர்த்தி. அழகான காதலை அழுத்தமான கருத்துக்களோடு கதையாக கொடுத்தமைக்கு…

வாழ்த்துக்கள். இது போல பல கதைகள் புனைந்து சிறப்புற வேண்டும்.

(பி.கு: ஆர்த்திக்கு ஓர் அன்பான வேண்டுகோள். நமக்கு மிகுந்த பிரியமான ஒன்றில் மூழ்கிப் போனால் நேரம் போவதே தெரியாது தான். பல நாட்கள் தாங்கள் பின்னிரவையும் தாண்டி விடியல் வரை விழித்துக் கொண்டு கதை எழுதுவதை நான் அறிவேன். இரவின் தூக்கம் நமது மனதிற்கும் உடலுக்கும் மிக முக்கியம் இல்லையா. கதை சற்று தாமதம் ஆனாலும் காத்திருக்கும் தோழமைகள் உங்களுக்கு உண்டு. எனவே தங்கள் நலத்தைப் பிரதானமாக கொள்ளுங்கள். Just a humble request from your friend )

~~~ மது ஹனி

Advertisements

தீராதது காதல் தீர்வானது

சகோதரி ஆர்த்தி ரவிக்கு,

தங்களின் தீராதது காதல் தீர்வானது நாவல் பற்றி சில வார்த்தைகள் சகோதரி. நல்ல கிளாஸ் நாவல் சகோதரி இது. ரசனையில் அடுத்த கட்டத்துக்கு அழைத்து சென்றது சகோதரி உங்களின் இந்த நாவல்.

பொதுவாக அமெரிக்கா என்று வார்த்தைகளிலும், வரைபடங்களிலும் தெரிந்த விபரமானது இந்த நாவல் மூலம் அந்நாட்டின் மாகாணம், தட்பவெப்பம், சமூகசுழ்நிலை, அங்கு உள்ள ஆசியாவை சேர்ந்தவர்களின் நிலமை, பெண் உரிமைக்கான அமெரிக்காவின் சட்டங்கள், TIME SHARE பற்றி விபரம்&விளக்கம் இன்னும் பலவிபரங்களை தொட்டு சென்றது உங்களின் இந்த நாவல் சகோதரி.

பெற்றவர் செய்த பாவம் பிள்ளைகளின் தலையில் என்பார்கள். ஆனால் இங்கே பெற்றவள் செய்த தவறு டானியாவின் வாழ்வில் காதல் என்ற கசப்பு உணர்வை தருகிறது. அந்த உணர்வை போக்கி அவளின் தனிமை கூட்டை உடைத்து தீராதது, என் காதலில் தீர்வாகும் என அவளை மீட்கிறன் அவளின் தூய்மை காதலன் ஆரியன் நேத்தன். இதில் ஒரு இடைசொருகல், சொல்லாதா காதல் செல்லாது என உணராத ரோகன்.

இந்த நாவல் காதல் நாவல் என்றாலும் மறுமணம் செய்யும் பெண்ணின் மனஉணர்வுகள் அருமையாக தொடுகிறது. தேஜ்ஸ்வி, டானியா, ஷாம், டிவிங்கில், சைதன்யா மூலமாக அந்த தடுமாறும் உணர்வுகள் தெள்ள தெளிவாக புரிகிறது.

ஒவ்வொரு பதிவின் முன்னோட்டமாக வரும் கவிதைகள் அருமை சகோதரி. அதிலும் குறிப்பாக வரும் 6,10,21,23,24,25 பதிவுகளில் வரும் கவிதைகள் சூப்பர். மற்றும் இறுதி பதிவில் இருந்த கவிதை அருமை சகோதரி.

என் மௌனகவிதை கதை பேசுகிறதா..! {இரண்டு புள்ளிகள், ஒரு ஆச்சரியகுறி}

காதல் வாழ்வில் முக்கியப்பங்குண்டு

காதலை தாண்டிய வாழ்வும் நமக்குண்டு

காதல் தோல்வி வாழ்வில் எல்லையுமல்லா

அதனையும் கடந்து வாழ கற்றுக்கொள்

என்று வரும் கவிதை அருமை சகோதரி.

ஆரியன்நேத்தன் – டானியா, ஆதிரா – கெளதம், லுகாஸ் – எலைன், சைதன்யா –தேஜ்ஸ்வி, அருமை தம்பி நண்பனாக வரும் அஸ்வின், ரோகன், பெட்ரோ, பிரகதி, சீத்தல், ராஜ்கிரன் – டெய்சி, நவீன் மித்ரா, சைதேஷ், குழந்தைகள் பிரதம், பிரணவ்.ஷாம்,டிவிங்கில், தாமிரா, ஆதவன் நேத்தன், ரோகனின் அப்பா, அம்மா என வரும் அனைவரும் மிகவும் முக்கியமானவர்கள்.இந்த நாவலுக்கு.

நாவலில் கவர்ந்த கருத்துகள் மற்றும் கவர்ந்த இடங்கள்:-

1.ஆதிரா தன் கணவனுக்கு ஓய்வை பற்றி அஸ்வினிடம் சொல்லுமிடம் அருமை புரிதலுக்கு ஒரு அச்சாணி.

2.பிரமமுகூர்ந்தத்துக்கு ஒரு வர்ணனை “ விடியலை தொட சோம்பிக்கொண்டிருக்கும் இரவின் கடைசி மணித்துளிகள் “ அருமை வரிகள்.

3.ஒரு பெண்ணின் மனஉணர்வுகள் “ அவனை மறந்தேனா அல்லது மனதில் புதைத்தேனா”

4.ஆணின் மனம் என்பது என்னதான் வெற்றி பெற்றாலும் அடையும் இன்பத்தை விட தன் காதலுக்கு தன் காதலியிடம் சிறு எதிரோலியே பெரின்பம்.

5.பிள்ளைகளுக்கு வெற்றி, தோல்விகளை பற்றியும் வாழ்க்கையை பற்றியும் பாடம் நடத்தி வளர்ப்பது முக்கியம் ஆகும்.

6.எதிர்பாராததைக் கண்டால் நமக்கு அதிர்ச்சி தோன்றுவது இயற்கை. அது ஆனந்தமா, சோகமா என நிர்மானிப்பது இறைவன்.

7.மகள் என்றால் இந்த அப்பாக்களுக்கு அதிகபரிவுதான்.

8. ஆணும், பெண்ணும் வாழ்வில் எத்தனை வெற்றி படிக்கட்டுகள் தொட்டாலும் முழுநிறைவு தருவது குடும்பம் மட்டுமே.

வாழ்க்கை என்பது ஏர்உழவு மாடுகள் போன்று ஒன்றாக சென்றால் தான் வாழ்வு இனிக்கும். என் மனைவி என் வாழ்க்கை என்று கணவனும், என் கணவன் என் வாழ்க்கை என்று மனைவியும் அன்புடன் வாழ சொன்னது இந்நாவல். ஒரு தலை காதல் முடிவுகள் துயரமே. வாழ்க்கை என்ற புத்தகத்தில் காதல் என்பது ஒரு பக்கமே. முழு புத்தகமாகது. நகைசுவையுடன் ஒன்று சொல்வார்கள் காதலில் தோற்றால் தாடி மட்டும்தான் வளர்க்க வேண்டும். ஆனால் வெற்றி பெற்றால் பொண்டாட்டி, பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பார்கள். எனவே காதல் தோல்விக்கு மரணம் முடிவு இல்லை என கூறியது அருமை சகோதரி.

அன்புடன் V.முருகேசன்